நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேசியக் கொடியில் உள்ள மூவர்ணங்களும் நம் நெஞ்சில் துடிக்க வேண்டும் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
75வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கோவை ஈஷா யோகா மையத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆதியாகி முன் ஈஷா சார்பில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் தேசிய கொடியைக் காமன்வெல்த் பொதுச் செயலாளர் பெட்ரீசியா ஏற்றினார். அதனைத் தொடர்ந்து ஈஷா யோகா மையத்தின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஈஷா பள்ளி மாணவர்களின் பின்னல் கோலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் விழாவில் கலந்து கொண்டவர்களை மெய்சிலிர்க்கச் செய்தது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜக்கி வாசுதேவ், 75வது சுதந்திர தினவிழா மிகவும் மகத்தான நாள் எனவும், மக்களின் உறுதி தான் இதில் உள்ளதாகத் தெரிவித்தார். மக்களின் உறுதியினாலும் தெம்பினாலும் தான் நாடு முன்னேற்றத்துடன் செல்ல முடியும் எனத் தெரிவித்த அவர், தமிழ் என்றால் தெம்பு எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நாடு ஒரு மகத்தான நாடாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், வெயில் காலங்களில் மண்ணை காப்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து விவசாயிகளின் நலனுக்காகச் செயல்பட இருப்பதாகக் கூறினார்.
கயானா நாட்டில் 100 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள நிலத்தை விவசாயிகள் மண் காப்போம் இயக்கத்திற்காக அளித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இரண்டு வருடத்தில் அம்மண்ணிற்கு உயிரூட்டம் தருவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், பிரதமர் மூன்று நாட்களுக்கு வீடுகளில் பொதுமக்களைத் தேசியக் கொடி ஏற்ற கூறியது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், தேசிய கொடி என்பது நாட்டிற்கு அறிகுறி எனவும், பாரத தேசம் என்பதே தனி உலகம் எனவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு, தேசிய கொடியில் உள்ள வர்ணங்களும் நம் நெஞ்சில் துடிக்க வேண்டுமெனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த நடைமுறை ஒரு முறை வந்து விட்டாலே தொடர்ந்து, இனிவரும் காலங்களில் அனைவரும் பின்பற்றிக் கொள்வார்கள் எனவும், மண் காப்போம் இயக்கம் முடிந்து நம் நாட்டில் கால் வைத்தது மிகவும் மகத்தான நெகிழ்ச்சியான தருணமாக அமைந்ததாகக் கூறினார்.








