3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்குத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு!

3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்குத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது…

3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்குத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது போல் மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் எனச் சுதந்திர தின உரையில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் வழங்கியுள்ள 3% அகவிலைப்படி உயர்வை ஆறு மாதங்கள் கழித்து 01.07.2022 முதல் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது நடைமுறைக்கு மாறாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும், ஒன்றிய அரசின் நிறுவனம் விலைவாசிப் புள்ளியைக் கணக்கிட்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைக்கிறது. அதன்படி ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறது எனத் தெரிவித்துள்ள அவர், அதைப் பின்பற்றி மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை செயல்படுத்துகின்றன. இந்த நடைமுறைதான் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் கடந்த ஆட்சியாளர்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

ஆனால், ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் 3% அகவிலைப்படி உயர்வை அறிவித்து 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாடு அரசு அதைப் பற்றிச் சிந்திக்காமலிருந்த நிலையில் பல்வேறு ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. அதனை ஏற்றுக் கொண்டு முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால், 6 மாத அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்துள்ளது என்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘நாடக அரசியலின் அடுத்த காட்சி நாட்டுப்பற்றா? – தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்’

தற்போதைய தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பிறகு, கொரோனா காலகட்டத்தில் 18 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு வழங்கியபோது, அதைப் பின்பற்றி வழங்காமல் அப்போதும் 6 மாத காலம் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ள அவர், இது அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போதும் அதேபோன்று 6 மாத அகவிலைப்படி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களுக்குக் காலதாமதமாக அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதும், அறிவிக்கும் போதே 6 மாத அகவிலைப்படி உயர்வைப் பறித்துக் கொள்வது என்ற தந்திரத்தைக் கையாள்வதையும் வழக்கப்படுத்திக் கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

இது அரசு ஊழியர்களின் நலன்களுக்குப் பாதகம் ஏற்படுத்தும் செயலாகும் எனத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருதுவதாகத் தெரிவித்துள்ள அவர், 01.07.2022 முதல் வழங்குவதாக அறிவித்துள்ள 3% அகவிலைப்படி உயர்வை 01.01.2022 முதல் முன் தேதியிட்டு வழங்கிட வேண்டும் எனத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.