நடப்பு ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் சுற்றுலா துறைக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றமளிப்பதாக உத்தரப்பிரதேச சுற்றுலா துறை தலைவர் ஜேபி சிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு துறைகளும் சரிவை சந்தித்து வருகிறது. முக்கியமாக சுற்றுலா துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. 2 ஆண்டுகளாக பெரும் வீழ்ச்சியை கண்டுள்ள சுற்றுலாத் துறைக்கு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் எந்தவித சலுகையும், நிதியும் ஒதுக்காதது பெரும் ஏமாற்றத்தை தருவதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா தளங்களாக உத்தரப்பிரதேசத்தின் தாஜ் மஹால், ஆக்ரா கோட்டை, பதாபூர் சிக்ரி உள்ளிட்ட பகுதிகள் இருந்துவருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய உத்தரப்பிரதேச சுற்றுலா துறைத் தலைவர் ஜேபி சிங், “இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் சுற்றுலா துறைக்கு நிதி ஏதும் ஒதுக்காதது அதிர்ச்சியளிக்கிறது. கொரோனாவால் இந்த துறையும், துறை சார்ந்த மக்களும் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இது குறித்து மாநில அரசு எந்த கேள்வியையும் எழுப்பாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 1100 சுற்றுலா துறை ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 381 பேர் மத்திய அரசால் அங்கீகாரம் பெற்றவர்களாக உள்ளனர். இந்த மொத்த எண்ணிக்கையில் ஆக்ராவில் மட்டும் 450 பேர் வேலை செய்து வருகின்றனர். ஆனால் இவர்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளிவராதது வருத்தமளிப்பதாக உள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் சுற்றுலா துறை ஊழியர்களுக்கு 1 லட்சம் கடன் வழங்குவதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் கடன் தருவதால் அவர்களின் வாழ்வில் எந்த மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என குறிப்பிட்டார்.








