தமிழ் நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.67 கோடி – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்……..!

தமிழ் நாட்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 14-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி வரவு வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இறந்தவர்கள், இரட்டை வாக்குப்பதிவு, இடப்பயர்ச்சி உள்ளிட்டவை கண்டறியப்பட்டு மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

இதையடுத்து வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தவற்காக டிசம்பர் 19-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் படி பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் உள்ளிட்ட திருத்தம் கோரி மொத்தம் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பணிகள் கடந்த 10-ந் தேதி நிறைவடைந்தன.

முன்னரே அறிவித்தபடி இன்று காலையில் இருந்து மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வந்தன. தொடர்ந்து ஒட்டுமொத்த மாநிலத்திற்குமான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 67 லட்சத்து 07 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 7,617 பேரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.