அணு ஆயுதம் தாயரிப்பது தொடர்பாக ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா அதன் போர் கப்பல்கள் உள்ளிட்ட தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிகளுக்கு நகர்த்தி வரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையே உச்சகட்ட போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஈரானில் உள்ள இந்திய மக்கள் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஈரான் தலைநகர் டெகரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அவசர சுற்றறிக்கையில், ஈரானில் உள்ள இந்தியர்கள் கிடைக்கும் போக்குவரத்து வாய்ப்புகளை பயன்படுத்தி உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள் இந்திய தூதரகத்தோடு தொடர்பில் இருக்க வேண்டும் எனவும், பாதிப்புள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் மோசமாகி வரும் நிலைமை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஈரானில் உள்ள இந்தியர்கள் எப்போதும் அவர்களது கைகளில் பாஸ்போர்ட், விசா மற்றும் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்கும் மாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இவைத்தவிர ஈரானில் உள்ள இந்தியர்கள் அவர்களது இருப்பிடம் மற்றும் விவரங்கள் உள்ளிட்டவற்றை http://www.meaers.com/request/home என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு, ஏதேனும் அவசர உதவிக்கு cons.tehran@mea.gov.in என்ற மின்னஞ்சல் மற்றும் +989128109115 , +989128109109 , +989128109102 , +989932179359 என்ற தொலைபேசி எண்களை பயன்படுத்துமாறும் இந்திய தூதரகம் இந்தியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.







