உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் படிப்பு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுமா என்று தேமுதிக விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கட்சி பிரமுகரின் இல்ல நிகழ்வில் பங்கேற்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அதன் பின் முடிவெடுக்க வேண்டும் என்றார். இதனையடுத்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை முன்பை விட தற்போது குறைந்துள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், ஆங்காங்கே பாலியல் தொல்லைகள் என்ற ஒன்று மட்டும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.
மேலும் போர் காரணமாக உக்ரைன் நாட்டிலிருந்து மருத்துவ படிப்பைத் தொடரமுடியாமல் நாடு திரும்பிய மாணவர்கள் மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு கூறிய நிலையில், அவர்களுக்கு நீட் தேர்வு என்பது நடத்தப்படுமா? இல்லையா? என்பது குறித்த கேள்விக்குத் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும், எதிர்காலத்தில் தேமுதிக தமிழகத்தை ஆளும் என்றார். மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது நலமுடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








