100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக தேமுதிக அரசியல் களத்தில் தோல்விகளை சந்தித்து வருகிறது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக பின்னடைவை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அரசியலில் பணிகளில் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வருகிறார். இதனால் கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் கட்சியை வழிநடத்தி வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே தேமுதிக முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து வெளியேறி மாற்று கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். சமீபத்தில் பெரம்பலூர் மாவட்ட தேமுதிக செயலாளர் காமராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் விஜயகாந்த் மனதை உருக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆசை வார்த்தை கூறி மோசம் செய்யும் கயவர்களை நம்பி கட்சியை விட்டுச் செல்வது தனக்கும் கட்சிக்கும் செய்யும் துரோகம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
“எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மைதான். அதற்காக கட்சிக்கு எதிர்காலமே இல்லை என்று நினைப்பது தவறானது” என்றும், 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது எனவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக மீது அவதூறு பரப்புபவர்களின் பேச்சுக்களை கட்சி தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கழகத்தின் வளர்ச்சிப் பாதைக்கு நிர்வாகிகளும் தொண்டர்களும் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.