உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி ஐநாவின் உச்சபட்ச அதிகாரம் படைத்த சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யா போர்குற்றத்தில் ஈடுபடுவதாக கூறி சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட சர்வதேச நீதிமன்றம், போருக்கு எதிராக 13 வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய கூட்டமைப்பு மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், சமீபத்தில் ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிரான வழக்கில் உக்ரைன் முழுமையான வெற்றியை பெற்றிருப்பதாக கூறினார். சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவானது சர்வதேச சட்டத்துக்கு கட்டுப்பட்டதாகும் என்று குறிப்பிட்ட அவர், ரஷ்யா இதனை மதித்து நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ரஷ்யா தீர்ப்பை மதிக்காத பட்சத்தில், அந்த நாடு மேலும் தனிமைப்படுத்தப்படும் என்றும் ஜெலன்ஸ்கி கூறினார்.
மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று உரை ஆற்றினார். அப்போது அவர், உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரை PEARL HARBOR மற்றும் இரட்டை கோபுர தாக்குதல்களுடன் ஒப்பிட்டார். மேலும், ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 80 ஆண்டுகளில் பார்த்திராத அளவுக்கான தீவிரவாத தாக்குதலை உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜெலன்ஸ்கியின் உரைக்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று பலத்த கரவொலியுடன் ஆதரவு தெரிவித்தனர்.








