நீட் முதுநிலை தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 21ஆம் தேதி நடைபெறும் என மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது.
முதுகலை மருத்துவ நீட் தேர்வு வருகிற மார்ச் 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் முதுகலை மருத்துவ நீட் தேர்வு 6 முதல் 8 வாரங்கள் வரையில் ஒத்திவைக்கப்படுவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த நீட் முதுநிலை தேர்விற்கான தேதியை தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வுகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட் முதுநிலை தேர்வு மே 21ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் பங்கேற்க மார்ச் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் மே 16ஆம் தேதி ஹால்டிக்கெட் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜூன் 20ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.








