வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்திற்கு தடை விதித்திருப்பதோடு, நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான முழு வரைவு கொள்கையையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
வளர்ப்பு பிராணிகளில் முதன்மையான தேர்வு நாய்தான். இந்நிலையில், வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுவதை முறைப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக எந்த வகை நாய்களை வளர்க்க வேண்டும், அவற்றை எவ்வாறு வளர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான வரைவு கொள்கையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:
- வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்திற்கு தடை விதிப்பு
- அனைத்து நாய் வளர்ப்பாளர்களும் பொறுப்பான இனப்பெருக்க நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும், மேலும் நாய்களின் உடல் மற்றும் மன நலம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வலியுறுத்தல்.
- தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் (TNAWB) இனப்பெருக்கம் செய்யும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான சான்றிதழை வழங்கும்.
- நாய்கள் வளர்ப்பவர்கள், இனப்பெருக்கம் செய்யப்படும் குறிப்பிட்ட இனம் குறித்து TNAWBல் பதிவு செய்ய வேண்டும்.
- இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் நாய்களை, கால்நடை மருத்துவரிடம் முன் உடல் நலம் பரிசோதிக்க வேண்டும்.







