இம்ரான் கானை விடுதலை செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறி, அவரை விடுதலை செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறி, அவரை விடுதலை செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். ராணுவம் குறித்து அவதூறாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

சில மாதங்களுக்கு முன்னர், இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நாடு முழுவதும் வெடித்த கலவரத்தை தொடர்ந்து அவரது கைது நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே, மே 9ம் தேதி வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இம்ரான் கானை அந்நாட்டின் ரேஞ்சர்ஸ் எனப்படும் அதிரடி படையினர் நீதிமன்றத்தின் ஜன்னல்களை உடைத்து கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இம்ரான் கானை கைது செய்வதை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர் அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இம்ரான் கான் கைது செய்யப்பட்டட்தை கண்டித்து இஸ்லாமாபாத் உள்பட அந்நாட்டின் பல இடங்களில் பிடிஐ கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : கிருஷ்ணகிரியில் நியூஸ்7 தமிழ் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி – மாணவர்களின் அமோக ஆதரவுடன் நிறைவு 

இந்நிலையில், இன்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது, அவசியமற்றது என்று கூறி, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், நாளை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜராக வேண்டும் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.