“காதல் அரசியலை பேசும் நட்சத்திரம் நகர்கிறது”

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் காதல் எவ்வாறு குடும்ப பிரச்னையாகவும், சமூக பிரச்னையாகவும் மாறுகிறது என்பதை பற்றி பேசும் படமாக இருப்பதாக இருக்கிறது.  இந்த சமூகம் எனக்கு என்ன கொடுத்ததோ அதைதான் நான் திருப்பி கொடுத்திருக்கிறேன்…

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் காதல் எவ்வாறு குடும்ப பிரச்னையாகவும், சமூக பிரச்னையாகவும் மாறுகிறது என்பதை பற்றி பேசும் படமாக இருப்பதாக இருக்கிறது. 

இந்த சமூகம் எனக்கு என்ன கொடுத்ததோ அதைதான் நான் திருப்பி கொடுத்திருக்கிறேன் என்று திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் குறித்து பா.ரஞ்சித் பேசி இருந்தார். இங்கு எனக்கு என்று பா.ரஞ்சித் குறிப்பிடுவது, சாதி,மதம், பாலினம் என எதன் பேரால் ஒடுக்கப்பட்டாலும் அந்த மனிதனே நான், எனக்கு சமூகம் கொடுத்ததை திருப்பி கொடுக்கிறேன் என்பதே அதன் பொருள் என்பதை பறைசாற்றுகிறது நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம்.

பாண்டிச்சேரியில், காதலை வைத்து உருவாக்கப்படும் அரசியல் குறித்து நவீன நாடகம் ஒன்றை நடத்த, நாடகக்கலைஞர்கள் ஆயத்தமாகிறார்கள். அதில் காளிதாஸ், துஷாரா, ஹரிகிருஷ்ணன், ஷபீர்,வினோத், உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள். இவர்களுடன் கலையரசன் இணைந்துக்கொள்கிறார். இந்த நாடகம் நடந்ததா, நாடக பயிற்ச்சியில் இருக்கும் கலைஞர்களுக்குள் உருவாகும் காதல், அதன் சிக்கல்கள், தீர்வுகள் என்ன என்பதே இப்படம்.

தமிழ் சினிமா பேச துணியாத காதல் அரசியலை பேசுவதன் மூலம் நீண்ட நெடிய காலமாக சமூகத்தில் நிகழக்கூடிய, அடுக்கடுக்கான சிக்கல்களை , கூர்மையாகவும் வெளிப்படையாகவும் உரையாட எத்தனித்துள்ளது ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம்.

சாதி, மதம், பாலினம், ஊடாக திணிக்கப்பட்டிருக்கும் புறக்கணிப்பு ஒடுக்குமுறைகள் பற்றி, ஒளிவுமறைவில்லாத கேள்விகளை எழுப்பி, காதல், குறித்தும் திருமணம் குறித்தும் கட்டமைக்கப்பட்டிருக்கும் இயற்கைக்கு எதிரான கலாச்சார பிம்பத்தையெல்லாம் கண்ணாடி கடைக்குள் கல் எரிவது போல் தன் திரைமொழி மூலம் உடைத்து சுக்குநூராக்கி இருக்கிறார்.

இரண்டு தனிநபர்களுக்குள் உருவாகும் காதல், எப்படி குடும்பப்பிரச்னையாகவும், சமூக பிரசனையாகவும், அரசியலாகாவும் மாற்றப்படுகிறது என்பதை பல இடங்களில் விரிவாக பேசுகிறது. அம்பேத்கரிஸ்ட்டாக வரும் துஷாராவின் பேச்சும் அரசியலும் பா.ரஞ்சித்தை நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதை தவிர்க்க முடியவில்லை.

காளிதாஸ், கலையரன் தன் யதார்த்த நடிப்புமூலம் ஸ்கோர் செய்கிறார்கள். தென்மாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்க்கிறது. கிஷோரின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு தூண்.

சுவாரசியம் குறையாமல், நேர்த்தியான கலைத்தன்மையோடு படம் எல்லா இடங்களிலும் மிளிர்ந்திருக்கிறது .காதலைச் சுற்றி இங்கு கட்டமைத்திருக்கும் போலி விழுமியங்கள் பழமைவாதங்கள் இவற்றின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒவ்வொருவரையும் கேக்விக்கணைகளால் துளைக்கிறது வசனங்கள்.

இளையராஜாவின் பாடல்கள் மீதான காதல் பா.இரஞ்சித்தின் எல்லா படங்களிலும், பிரதிபலிக்கும். இந்த படத்திலும் அது எதிரொளிக்கிறது. அதற்கும் பின்பும் தவிர்க்க முடியாத அரசியலை பேசுகிறது.

ஒரு படைப்பு அது தோன்றிய காலத்திலே, விவாதத்தையும், கலகத்தையும் ஏற்படுத்துமாயின் அதுவே அந்த படைப்பின் வெற்றியாக இருக்க முடியும்.பிரபஞ்சத்தின் இயங்கியல் விதி காதல், அதற்கு எந்த பேதங்களும் இல்லை என நம்புகிறவர்களுக்கும், பழமைவாத பிற்போக்கு நம்பிக்கைகளால் சுழன்று கொண்டிருப்பவர்களுக்கும் இடையே உரையாடலை நிகழ்த்தத் தொடங்கியதே நட்சத்திரம் நகர்கிறது படத்தின் வெற்றி. காதல் எல்லா உயிர்களுக்குமானது, அதற்கு சாதி,மதம், பாலினம் என்று எதுவும் இல்லை என்பதே படம் பேசும் யதார்த்த அரசியல்.

கட்டுரையாளர்- அந்திப்பேரோளி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.