தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஜப்பான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கொரோனா தொற்று ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. கடந்த ஏழு, எட்டு மாதங்களாக உயிரிழப்புகளும் இல்லாத நிலை தான் உள்ளது. அதற்கு காரணம், தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக முதலமைச்சர் மாற்றியதுதான்.
தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசியை 96 சதவீதம் பேரும் 2வது தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். அதனால் மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளது. கொரோனா மரபணு சோதனை மேற்கொள்ள மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
அதற்கான பிரத்யேக ஆய்வகம் சென்னையில் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் தொடர்ந்து கொரோனா மரபணு மாற்றத்தைக் கண்காணித்து வருகிறோம். கொரோனா தொற்று பரவல் குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேவையான அளவிற்கு பரிசோதனை மையங்கள் உள்ளன.
சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.







