இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்த அதே நாளில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார்.
நாட்டிற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி அதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாகும். உலக கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான விராட் கோலி, தான் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் நேசிப்பதாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டை நீண்ட காலம் விளையாட விரும்புவதாகவும் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸும் டெஸ்ட் கிரிக்கெட் மீதான தனது காதலை பலமுறை வெளிப்படுத்தினார்.
விராட் கோலி, பென் ஸ்டோக்ஸ் போன்ற மிகப்பெரும் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை மிகவும் புரிந்து கொண்டாலும், மறுபுறம், இலங்கை கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, தனது 26 வயதிலேயே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார். நல்ல வீரர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கும் வயது இது. ஆனால் ஹசரங்க இந்த வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலக முடிவு செய்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வனிந்து ஹசரங்காவின் இந்த முடிவிற்கு லீக் கிரிக்கெட் தான் மிகப்பெரிய காரணம் என்று கூறப்படுகிறது. வனிந்து ஹசரங்க உயர்தர லெக் ஸ்பின்னர். இதன் காரணமாக அவர் ஐபிஎல் உட்பட அனைத்து வெளிநாட்டு லீக்களிலும் விளையாடுகிறார். லீக்கில் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார் என்று சொல்லபப்டுகிறது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் அவர் தகவல் அளித்துள்ளதுடன், வாரியமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா கூறுகையில், நாங்கள் அவருடைய முடிவை ஏற்றுக்கொள்கிறோம். மேலும் எங்கள் வெள்ளை பந்து திட்டத்தில் ஹசரங்கா ஒரு முக்கிய அங்கமாக இருப்பார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று கூறினார்.
வனிந்து ஹசரங்க கிரிக்கெட் அறிமுகம்;
26 வயதான வனிந்து ஹசரங்கா 2020 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமானார். அவர் இலங்கைக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில் அவர் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். பேட்டிங்கை பொறுத்தவரை, அவர் 1 அரை சதம் உட்பட, 196 ரன்கள் எடுத்துள்ளார். புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வனிந்து ஹசரங்க 58 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார் மற்றும் 48 ODI போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் மூலம் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் குறைவாக விளையாடுகிறார் என்பது தெளிவாகிறது. அதனால் தான் இப்போது அவர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
தோனியை பின்பற்றி ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்;
ஆகஸ்ட் 15, 2020 அன்று, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரைப்போலவே, இப்போது ஆகஸ்ட் 15, 2023 இன்று, இலங்கை சுழற்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான வனிந்து ஹசரங்கா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா










