மேம்படுத்தப்பட்ட PSLV ராக்கெட் சோதனை வெற்றி!

தொடர்ச்சியாக இரண்டு PSLV ராக்கெட் ஏவுதல் திட்டங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட மூன்றாம் நிலை ராக்கெட் மோட்டாரை இஸ்ரோ வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), நேற்று (நவம்பர் 12 )வியாழக்கிழமை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் நிலையான சோதனை மையத்தில், தனது PSLV ராக்கெட்டின் மூன்றாம் நிலையான PS3-ன் தரைநிலை நிலையான சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. PSLV-C61/EOS-09 மற்றும் PSLV-C62/EOS-N1 ஆகிய இரண்டு தொடர் விண்வெளித் திட்டங்களின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளைத் தொடர்ந்து, மூன்றாம் நிலை ராக்கெட்டின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பில் விரிவான மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

வடிவமைப்பில் முக்கிய மாற்றங்கள்!

இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகளுக்குப் பிறகு, PS3 மூன்றாம் நிலை ராக்கெட்டின் கட்டமைப்பு விரிவாக மறுஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, வடிவமைப்பின் பாதுகாப்பு வரம்புகள், மூலப்பொருட்களை ஏற்றுக்கொள்வதற்கான தரநிலைகள், ஒருங்கிணைப்பு நடைமுறைகள் மற்றும் தரப் பரிசோதனைகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ராக்கெட்டின் நாசில் (Nozzle) வடிவமைப்பில் முக்கிய மேம்பாடுகள் செய்யப்பட்டு, அதன் பாதுகாப்பு வரம்புகள் அதிகரிக்கப்பட்டன. மேலும், மூலப்பொருட்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள், ஒருங்கிணைப்பு செயல்முறைகள் மற்றும் தரப் பரிசோதனைகளிலும் புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இத்துடன், இயந்திர இணைப்புகளின் வலிமை அதிகரிக்கப்பட்டதுடன், சீலிங் அமைப்புகளில் (Sealing Systems) கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இணைக்கப்பட்டன. வடிவமைப்பில் செய்யப்பட்ட மேம்பாடுகள் போதுமான பாதுகாப்பை வழங்குகின்றனவா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், ராக்கெட்டின் பல்வேறு கட்ட ஒருங்கிணைப்பு மற்றும் போக்குவரத்தின்போது, புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு நடைமுறைகள் மற்றும் அழிவில்லாத சோதனை முறைகள் (Non-Destructive Testing – NDT) செயல்படுத்தப்பட்டன.

நவம்பர் 12-ல் வெற்றிகரமான சோதனை!

இந்த மாற்றங்கள் அனைத்தும் செய்யப்பட்ட பிறகு, மேம்படுத்தப்பட்ட புதிய PS3 திட எரிபொருள் மோட்டார் நிலை உருவாக்கப்பட்டது. இந்த புதிய மோட்டார் நிலை நவம்பர் 12-ம் தேதி வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் கிடைத்த தரவுகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சோதனைகள் திட்டமிடப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

NavIC வழிகாட்டி அமைப்பை வலுப்படுத்தும் NVS-03!

இதற்கிடையே, கடந்த அக்டோபர் 31-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து GSLV-F18 ராக்கெட் மூலம் அடுத்த தலைமுறை வழிகாட்டி செயற்கைக்கோளான NVS-03-ஐ இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இஸ்ரோவின் அடுத்த தலைமுறை வழிகாட்டி செயற்கைக்கோள் வரிசையில் இது மூன்றாவது செயற்கைக்கோளாகும். இந்தியப் பிராந்திய வழிகாட்டி செயற்கைக்கோள் அமைப்பான (IRNSS) வழியாக வழங்கப்படும் வழிகாட்டிச் சேவைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த NVS-03 செயற்கைக்கோளில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுக் கடிகாரம் (Atomic Clock) மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட அணுக் கடிகாரங்களும் இடம்பெற்றுள்ளன. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள L5 மற்றும் S-band சிக்னல்களுடன் கூடுதலாக L1 வழிகாட்டி சிக்னலும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் NavIC அமைப்பின் திறன்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

1,500 கி.மீ. தொலைவு வரை NavIC சேவை!

இஸ்ரோவின் தகவலின்படி, இந்தியாவின் நிலப்பரப்பு முழுவதும் மட்டுமின்றி, நாட்டின் புவிசார் எல்லைக்கு அப்பால் 1,500 கி.மீ. தொலைவு வரையிலும் வழிகாட்டிச் சேவைகளை வழங்கும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த NVS-03 செயற்கைக்கோளின் ஏவுதல், இந்தியாவின் சொந்த வழிகாட்டி அமைப்பான NavIC-ஐ மேலும் வலுப்படுத்துவதுடன், செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிகாட்டிச் சேவைகளில் இந்தியாவின் தற்சார்புத் திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.