காசநோய் உயிரிழப்பு 38% குறைவு! இந்தியா சாதனை!

இந்தியாவில் காசநோய் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025-ல் 38% குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் காசநோய் (TB) ஒழிப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் காசநோயால் ஏற்படும் உயிரிழப்புகள் 38% குறைந்துள்ளன. இதன் மூலம் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 28 ஆக இருந்த உயிரிழப்பு விகிதம் 18 ஆகக் குறைந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) 2026-ம் ஆண்டுக்கான உலக காசநோய் அறிக்கையின்படி, காசநோய் ஒழிப்புக்கான உலகளாவிய உத்தியில் 2025-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டிய 35% உயிரிழப்பு குறைப்பு இலக்கை இந்தியா எட்டியுள்ளது. இருப்பினும், இந்த இலக்கு முதலில் 2020-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஐந்து ஆண்டுகள் தாமதமாக இந்த இலக்கை இந்தியா எட்டியுள்ளது.

94% சிகிச்சை வெற்றி விகிதம்!

மருந்துகளுக்கு கட்டுப்படும் காசநோய் பாதிப்புக்குள்ளான நோயாளிகளில் 94% பேர் சிகிச்சை வெற்றி பெற்றுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீவிரமான நோய் கண்டறிதல் நடவடிக்கைகள், விரைவான மூலக்கூறு பரிசோதனைகள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய கையடக்க மார்பு எக்ஸ்ரே கருவிகள், உரிய நேரத்தில் சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து உதவிகள் ஆகியவை இந்த முன்னேற்றத்துக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளன.

அதேநேரத்தில், மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட காசநோய் தொடர்ந்து சவாலாக உள்ளது. 2025-ம் ஆண்டில் உலகளவில் ரிஃபாம்பிசின் (Rifampicin) மருந்துக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட காசநோயால் பாதிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்ட 3.7 லட்சம் பேரில், 42% பேர் மட்டுமே சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா உள்ளிட்ட ஐந்து அதிக பாதிப்புள்ள நாடுகள், உலகளாவிய சிகிச்சை இடைவெளியில் சுமார் 60% பங்கைக் கொண்டுள்ளன.

அறிகுறிகள் இல்லாத 15 லட்சம் பேருக்கு காசநோய் கண்டறிதல்!

மத்திய அரசின் தீவிர பரிசோதனை நடவடிக்கைகள் மூலம், வெளிப்படையான அறிகுறிகள் இல்லாத சுமார் 15 லட்சம் பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2024 டிசம்பர் 7 முதல் 2026 நவம்பர் 8 வரை நடைபெற்ற ‘காசநோய் இல்லாத பாரதம்’ (TB Mukt Bharat Abhiyaan) இயக்கத்தின் கீழ், 25 கோடிக்கும் அதிகமானோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 11 கோடிக்கும் அதிகமான மார்பு எக்ஸ்ரே பரிசோதனைகளும், 3 கோடி மூலக்கூறு பரிசோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று (நவம்பர் 12) வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, இந்த இயக்கத்தின் மூலம் மொத்தம் 48.64 லட்சம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் 14.97 லட்சம் பேருக்கு நோய்க்கான வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை.

முதற்கட்டமாக, 2024 டிசம்பரில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 347 முன்னுரிமை மாவட்டங்களில் 100 நாள் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் தொடங்கப்பட்டது. பின்னர் இந்தத் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி இரண்டாவது 100 நாள் தீவிர முகாம் தொடங்கப்பட்டது. இதில் அதிக ஆபத்துள்ள 1.58 லட்சம் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற வார்டுகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பிரிவினர் இலக்காகக் கொள்ளப்பட்டனர். காசநோய்க்கான அறிகுறிகள் வெளிப்படையாக இல்லாதவர்கள் பரிசோதனைக்காக மருத்துவமனைகளை அணுகாமல் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற தீவிர பரிசோதனைகள் மூலம் அவர்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையுடன் இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உதவி!

காசநோயாளிகளைக் கண்காணித்து, அவர்களின் சிகிச்சை நிலையைத் தொடர்ந்து பதிவு செய்வதற்கு ‘நி க்ஷய்’ (Ni-kshay) டிஜிட்டல் தளம் பயன்படுத்தப்படுகிறது. தகுதியுள்ள நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உதவி வழங்க ‘நி-க்ஷய் போஷன் யோஜனா’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், சிகிச்சை பெறும் காசநோயாளிகளுக்கு தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் உதவிகளை வழங்கும் வகையில் ‘நி-க்ஷய் மித்ரா’ (Ni kshay Mitra) திட்டமும் செயல்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டில் 67,933 ஊராட்சிகள் காசநோய் இல்லாத ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. காசநோய் ஒழிப்புத் திட்டத்துக்குத் தேவையான நிதியில் 96% உள்நாட்டு நிதி ஆதாரங்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் காசநோய் பாதிப்பு மதிப்பீட்டில் மாற்றம் வருமா?

இதற்கிடையே, இந்தியாவின் காசநோய் பாதிப்பு குறித்த மதிப்பீடுகளில் முக்கியமான தரவு இடைவெளி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2010 முதல் 2025 வரையிலான இந்தியாவின் காசநோய் பாதிப்பு மதிப்பீடுகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவிலான கண்காணிப்பு ஆய்வின் முதல் சுற்று மற்றும் தேசிய காசநோய் பரவல் ஆய்வு நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த மறுஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. புதிய தரவுகள் தொடர்பாக தொழில்நுட்ப ஆலோசனைகள் நடத்தப்பட்ட பிறகு, 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கான நாட்டின் சுயவிவரத்தை உலக சுகாதார அமைப்பு புதுப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் காசநோய் பாதிப்பில் சுமார் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் பதிவாகிறது. 2025-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.06 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11.3 லட்சம் பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். 2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் உலகளவில் காசநோய் பாதிப்பு 14% மட்டுமே குறைந்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் 50% பாதிப்பு குறைப்பை எட்ட வேண்டும் என்பதே உலக காசநோய் ஒழிப்பு உத்தியின் இலக்காக இருந்தது. இதனால், உலகளாவிய அளவில் காசநோய் ஒழிப்பு நடவடிக்கைகளில் இன்னும் அதிக முன்னேற்றம் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.