பட்டா வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டப் பெண்களால் பரபரப்பு!

12 வருடங்களாகப் பட்டா கேட்டுப் பல முறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைகள்,…

12 வருடங்களாகப் பட்டா கேட்டுப் பல முறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள்,
விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கூலித் தொழிலாளர்கள் என 50க்கும்
மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். தங்களுக்குச்
சொந்த வீடு இல்லை, வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வருகிறோம், வறுமைக்கோட்டிற்கு
கீழ் உள்ள எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கடந்த 12 வருடங்களாக பலமுறை மனு அளித்திருந்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆதிதிராவிடர்களுக்கான அரசின் சலுகைகள் எதுவும் எங்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து சாலையிலன் குறுக்கே அமர்ந்துத் துண்டை விரித்து தாங்கள் இந்தியக் குடிமகன் என்பதற்கான அடையாள அட்டைகளான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை துண்டில் தூக்கி வீசினர். அரசுத் தரப்பில் உரிய பதிலைப் பெறாமல் நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என உறுதியுடன் தெரிவித்தனர்.

சாலையின் குறுக்கே அமர்ந்து போராட்டம் நடத்தியவர்களைக் காவல்துறையினர் ஓரமாக அமர்ந்து போராட்டம் நடத்தும்படி கூறினர். அதனை ஏற்க மறுத்தப் பெண்கள் 12 வருடங்களாக அலைவதாகவும் உரிய நீதி கிடைக்காமல் இங்கிருந்து செல்லப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து இராமநாதபுரம் வட்டாச்சியர் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.