காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி – சுட்டுப் பிடித்த போலீசார்

காவலரை கத்தியால் வெட்டிவிட்டு  தப்பிக்க முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். தாம்பரம் அடுத்த எருமையூரை சேர்ந்தவர் ரவுடி லெனின். இவரது வலது கையாக செயல்பட்டு வந்தவர் ரவுடி சச்சின்(22). இவர் மீது…

காவலரை கத்தியால் வெட்டிவிட்டு  தப்பிக்க முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.

தாம்பரம் அடுத்த எருமையூரை சேர்ந்தவர் ரவுடி லெனின். இவரது வலது கையாக செயல்பட்டு வந்தவர் ரவுடி சச்சின்(22). இவர் மீது இரண்டு கொலைவழக்குகள் உள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலை 03.30 மணியளவில் சோமங்கலம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனது கூட்டாளி பரத்துடன் இரு சக்கர வாகனத்தில் சச்சின் வந்துள்ளார். அவரை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது, 2 நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் மீது சச்சின் வீசியுள்ளார். வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சோமங்கலம் காவல் நிலைய காவலர் பாஸ்கர் என்பவரது இடது தோள்பட்டையில் வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதனால் சோமங்கலம் காவல் ஆய்வாளர் சிவகுமார், சச்சினின் வலது பக்க மூட்டுக்கு மேலேயும் மூட்டுக்கு கீழேயும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயமடைந்த சச்சினை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் காயமடைந்த சச்சின் மற்றும் காவலர் பாஸ்கரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்த பிறகு சச்சின் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் இன்று காலை 10.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை மேற்கொள்கிறார். தப்பியோடிய கூட்டாளி பரத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.