காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ராஜஸ்தான் முதல்வராக பதவி வகித்துவரும் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
சசி தரூர் ஏற்கனவே வேட்பு மனு விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொண்டுவிட்டார். கட்சியின் பொருளாளர் பவன் பன்சாலும் வேட்பு மனு படிவத்தை பெற்றிருக்கிறார். ஆனால், அசோக் கெலாட் இதுவரை வேட்பு மனு படிவத்தை பெற்றுக் கொள்ளவில்லை.
ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை காங்கிரஸ் கட்சி பின்பற்றி வருகிறது.
இதனால், ராஜஸ்தான் முதல்வர் பதவியை அசோக் கெலாட் ராஜிநாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகின. அவ்வாறு அவர் முதல்வர் பதவியை விட்டு விலக நேரிடும் பட்சத்தில் துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட் முதல்வாராக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின.
சச்சின் பைலட் முதல்வராவதை ஏற்க மாட்டோம் என 80 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் போர்கொடி உயர்த்தினர்.
இதனால் அந்த மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசோக் கெலாட், முதல்வர் பதவியையும் காங்கிரஸ் தலைவர் பதவியையும் வகிக்க வேண்டும் என சில மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்தக் கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் சாந்தி தரிவால், மகேஷ் ஜோஷி ஆகியோரும், ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைவர் தர்மேந்திர ரத்தோரும் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இதுதொடர்பாக அவர்களிடம் 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான அஜய் மாக்கன், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் அறிக்கையை வைத்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திக்விஜய் சிங், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் தேர்தலில் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.







