உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்! – தாய்மொழி தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.  வங்கதேச அறிஞரான ரபீக்குல் இஸ்லாம் 1998-ம் ஆண்டு யுனெஸ்கோவில் பிப்ரவரி 21…

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.  வங்கதேச அறிஞரான ரபீக்குல் இஸ்லாம் 1998-ம் ஆண்டு யுனெஸ்கோவில் பிப்ரவரி 21 ஐ தாய் மொழி தினமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்மொழிந்தார்.

தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், தாய் மொழிக்காக போராடியவர்கள் ஆகியோரை  நினைவுகூறும் விதமாகவும், அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையிலும்  பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..

” தாய்மொழி தான் ஓர் இனத்தின் அடையாளம் – உயிர்!. உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்!. தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும்
ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்!. தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1627874870758633473?s=46&t=tcemY7BhT7XUBpm2BuACJw

இதனையும் படியுங்கள்: உலக தாய்மொழிகள் தினம் – ஏன்…? எப்படி…?

தாய்மொழி தினம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதவில்…

” மனிதரின் சிந்தனையைத் தீர்மானிப்பது அவரது தாய்மொழியேயாம். எத்தனை மொழிகளும் தத்தம் விருப்பத்தில் கற்றுக்கொள்ளலாம். அத்தனையிலும் அன்னை போல் இருப்பதால் தான் ஒரு மொழிக்கு மாத்திரம் தாய்மொழி என்று பேர். சிந்திப்பதை சொல்லில் வெளிப்படுத்தும் அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்.” என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/ikamalhaasan/status/1627894782432534531?t=vZVJyEqvugv7mRpE1krA1A&s=08

இதே போல பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தாய்மொழி தினம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்…

”இன்று உலகத் தாய்மொழி நாள். தாய்மொழியை மதிக்காதவன், தாயை மதிக்காதவனுக்கு சமம். தமிழர்களாகிய நாம் தமிழ் மொழியிலேயே எழுதுவோம், உரையாடுவோம், பேசுவோம். குழந்தைகளை தமிழிலேயே படிக்க வைத்து, தாய்மொழியின் பெருமைகளைக் கற்றுத் தருவோம்! தமிழை வளர்க்க வேண்டிய, காக்க வேண்டிய கடமை அரசுக்கு தான் அதிகம். ” என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/draramadoss/status/1627893023689564160

தாய்மொழி தினம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்ட கவிதை :

”எழுத்தும் நீயே
சொல்லும் நீயே
பொருளும் நீயே
பொற்றமிழ்த் தாயே

அகமும் நீயே
புறமும் நீயே
முகமும் நீயே
முத்தமிழ்த் தாயே

மாறும் உலகில் மாறாதியங்கும்
மாட்சி படைத்தனை நீயே
உனக்கு வணக்கம் தாயே
எம்மை உலக மாந்தராய் உய்யச் செய்வாயே”

https://twitter.com/Vairamuthu/status/1627868095955234816

என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தக் கவிதையை வெளியிட்டுள்ளார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.