ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டின் கருதுகோளாக ”பன்மொழிக் கற்றலுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடு” என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான கருதுகோளாக, ’தொடக்க நிலையில், தாய்மொழி வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் மூலம், பன்மொழிக் கல்வியைத் தொடர வேண்டும்’ என்று யுனெஸ்கோ அறிவுறுத்தியுள்ளது. உலக தாய் மொழிகள் தினம் எப்படி வந்தது. இப்போது பார்க்கலாம்…
இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான் முதலில் கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில், கிழக்கு பாகிஸ்தான், தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது. ஒரே மதத்தினராக இருந்தாலும், மேற்கு பாகிஸ்தானில் அதிகம் பேசப்படும் உருது மொழியானது, கிழக்கு பாகிஸ்தானில் திணிக்கப்படுவதை, அந்த பகுதி மக்கள் விரும்பவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என்று வலியுறுத்தி, 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி ‘வங்க மொழி இயக்கம்’ உருவானது. இந்த இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க ராணுவம், காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்தது. இந்த போராட்டத்தில், மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஆனாலும் தணியாத போராட்டக் கனலால், 1956ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானின் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.
வங்க மொழி காக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, இதற்கான இயக்கம் தொடங்கப்பட்ட பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம், 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார். தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்களை நினைவுகூறவும், அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ம் ஆண்டு அறிவித்தது.
தமிழ்நாட்டில் போராட்டம்:
மொழிக்காக, மொழித் திணிப்பை எதிர்த்து, வங்க தேசத்தில் நடைபெற்ற போராட்டத்தை விட தீவிரமான போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த 1938, 1965ம் ஆண்டுகளில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக இருந்தது. கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிராக முதல் 1938ல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அறிஞர்கள் பலரும் பங்கேற்றனர். அப்போது, நடைபெற்ற போராட்டத்தில் 1939ம் ஆண்டு நடராசன், தாளமுத்து முதல் களப்பலியாகினர். தொடர்ந்து, 1965ம் ஆண்டு இரண்டாம் கட்ட போராட்டத்தில் கிழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இதையும் படியுங்கள் : சங்க இலக்கியங்களுக்கு நூல் வடிவம் தந்த பெருஞ்சாதனையாளர் : தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர்
தன்னெழுச்சியாக மாணவர்கள் போராட்டக் களத்திற்கு வந்தனர். இதையடுத்து இந்தித் திணிப்பு கைவிடப்பட்டது. இரண்டாம் கட்ட மொழிகாக்கும் போராட்டத்தில், முதல் களப்பலி நடந்த ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி, பொதுக் கூட்டங்களையும் நடத்தியும் வருகின்றனர்.
ஆனால், இது ஏன் உலக அளவில் கவனம் பெறவில்லை? என்கிற கேள்வி உங்களுக்கு வரும். வங்க தேசம் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த போது உள்நாட்டில் அந்த போராட்டம் நடைபெற்றது. கிழக்கு பாகிஸ்தான் பின்னர் வங்கதேசம் தனி நாடாகவும் உருவானது. அந்நாட்டின் பிரதிநிதி உலக தாய்மொழிகள் தின, தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை, யுனெஸ்கோவும் அங்கீகரித்தது. ஆனால், தமிழ் மொழி காக்கும், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் அப்படி கொண்டு செல்லப்படவில்லை. அதனால், கவனத்தையும் பெறவில்லை என்கிறார்கள். இது மட்டுமின்றி வேறு சில காரணங்களும் உள்ளன என்கிறார்கள் மொழிப்போரில் பங்கேற்ற தலைவர்கள்.
தாய்மொழிக் கல்வி அடிப்படை உரிமை
தாய்மொழி வழியில் பன்மொழிக் கற்றலை வலியுறுத்தும் யுனெஸ்கோ, ’தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை’ என்கிறது. ஆனால், ‘அனைவரும் தாய்மொழியில் கல்வி கற்பதை உறுதி செய்ய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. உலக மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேருக்கு அவர்கள் பேசுகின்ற மொழி அல்லது அவர்களுக்கு புரிகின்ற மொழியில் கல்வி கிடைப்பதில்லை என்று புள்ளி விபரம் சொல்கிறது.
உலகம் முழவதும் 6, 700க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அதில், பல மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. ஒரு மொழி அழிந்து விட்டால், அத்தோடு ஒரு கலாச்சாரமும், அறிவு சார் பாரம்பரியமும் போய்விடும் என்று யுனெஸ்கோ எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கவிஞர் அறிவுமதி கூறுகையில், ’ஒரு குழந்தை முதலில் அறிகின்ற ருசி தாய்ப்பால். முதலில் உணர்கின்ற மொழி தாய்மொழி. தாய்ப்பாலை போல் தாய்மொழியும் உயிர்ப்பானது. தாய்மொழி என்பதும் ஒரு மொழிதானே என்று கடந்து போய்விட முடியாது. நம்முடைய 3 ஆயிரம் ஆண்டு மரபு, பண்பாடு, கலாச்சாரத்தை நினைவு அடுக்குகளில் கடத்தி வருகிறது’ என்கிறார்.
உலகத்தில் உள்ள பல மொழிகளுக்கும் மூத்த மொழியாகவும் செம்மொழியாகவும் நம் தமிழ் விளங்குகிறது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட அந்த ’தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை. அதன் தொடர்ச்சியில் இருக்கிறது’ என்கிறார் இலங்கைத் தமிழ் அறிஞர் சிவதம்பி. தொன்மைத் தமிழைத் தொடர்வோம்…
இதன் வீடியோ செய்தி: https://youtu.be/sKWfjAp0Irg