3 மாதங்களாகியும் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்: சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மூன்று மாதங்களாகியும் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 4, 8வது வார்டு மக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட…

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மூன்று மாதங்களாகியும் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 4, 8வது வார்டு மக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மம்பாளையம் ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளில் சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்கள்
வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம்
சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்னிலையில்
அம்மம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 4 மற்றும் 8 வது வார்டு பகுதி மக்களுக்கு
கடந்த மூன்று மாதங்களாகியும் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் அவதிக்குள்ளாகி வந்ததால் முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும்
மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள்
எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள்
காலிகுடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் எதிரே திடீர்
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ
இடத்திற்கு வந்த ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினரிடம் அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நீண்ட நேர பேச்சுவார்த்தையை
தொடர்ந்து அதிகாரிகள் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை
தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.