தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக, திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியில் நடைபெற்று வரும் அகழாய்வில் தமிழி எழுத்துக்களில் “புலி” என்று பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு வண்ண பானையோடு கண்டறியப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி அருகே நம்பியாற்று படுகையில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இங்கு அகழாய்வுப் பணி 2021-ம் ஆண்டு தொடங்கியது. முதற்கட்ட அகழாய்வில் செவ்வண்ணம், கருப்பு சிவப்பு வண்ண மட்கல பானை ஓடுகள், பழந்தமிழர் குறியீடுகள், இரும்பு ஆபரணங்கள், உள்ளிட்ட 1,009 அரிய தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழி எழுத்துக்களில் “புலி” என்று பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக, திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியில் நடை பெற்று வரும் அகழாய்வில் தமிழி எழுத்துக்களில் “புலி” என்று பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு வண்ண பானையோடு ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது எனவும், இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.






