ஆயுத பூஜையை முன்னிட்டு, பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை, பூக்கள் விற்பனைக்கு தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற இடம் ஆகும். இங்கு திண்டுக்கல் ராயாகோட்டை, ஓசூர், பெங்களூரு, மதுரை என பிற இடங்களில் இருந்தும் குமாரபுரம் ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர் என உள்ளூர் பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பல டன் பூக்கள் வருவது வழக்கம். இங்கிருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் கேரளா உட்பட பகுதிகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும்.
இந்நிலையில் நாளை தமிழ்நாடு முழுவதும் ஆயுதபுஜை பண்டிகை கொண்டாடப் படுவதையொட்டி தோவாளை மலர் சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 60 டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் மொத்த வியாபாரி கள் போட்டி போட்டு கொண்டு பூக்கள் வாங்கி செல்வதால், பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஆயுதபூஜையில் முக்கிய பங்கு வகிக்கும் வாடாமல்லி பூ, கடந்த வாரம் கிலோ ஒன்றிக்கு 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 240 ரூபாய்க்கும் தாமரை ஒன்று, 2 ரூபாயில் இருந்து 20 ரூபாய்க்கும் அரளி 450 ரூபாய்க்கும் செவ்வந்தி 400 ரூபாய்க்கும் ரோஜா 280 ரூபாய்க்கும் சம்பங்கி 400 ரூபாய்க்கும் மல்லிகை பூ 800 ரூபாய்க்கும் பிச்சி 1000 ரூபாய்க் கும் விற்கப்படுகிறது.








