நடிகை சமந்தா, முதன்முறையாக பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகை சமந்தா, இப்போது தெலுங்கு, தமிழில் உருவாகும் ’சாகுந்தலம்’, விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் இருவரும் பிரிய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதுபற்றி கருத்துத் தெரிவிக்காமல் இருந்த அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன் தாங்கள் பிரிவதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதையடுத்து பிரிவதற்கான காரணம் இதுதான் என்று ஏராளமான வதந்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் விவாகரத்துக்குப் பிறகு நடிகை சமந்தா, தனது முதல் பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். ’தி பேமிலிமேன் 2’ வெப் தொடரில் நடிகை சமந்தா நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான இந்த தொடர் சர்ச்சையை கிளப்பினாலும் இந்தியில் இதற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதோடு, நடிகை சமந்தாவின் நடிப்பும் அங்கு கவனிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு சில பாலிவுட் வாய்ப்புகள் வந்துள்ளன. இந்நிலையில் அவர் முதல் பாலிவுட் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் சில நாட்களில் இந்தப் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.









