கொளத்தூரில் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த மனு தள்ளுபடி!

கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், கொளத்தூர் தொகுதி வாக்கு இயந்திரங்களைச் சரிபார்க்கும்படி மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. சரிபார்ப்புக்கு எடுக்கப்பட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென கோளாறாகின. 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அனைத்து வாக்கு இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளைச் சரிபார்க்க வேண்டும். வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் தீர்ப்பை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.