தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று முதலமைச்சர் வசம் உள்ள காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை நீதான் அமானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக கேள்விநேரம் ஒதுக்கப்பட்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இதனைத்தொடர்ந்து விதி எண் 110-கீழ் முதலைமைச்சர் விஜய், ஒலிம்பிக் சிட்டி, மோடார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் புதிய தலைமைச் செயலகம ஆகிய 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “புராணம் பேசப்பட்டு, உலகின் தொன்மையான மொழி என்றால் அது தமிழ் மட்டுமே. உலகம் முழுவதும் சுமார் 9 கோடி மக்களாலும், இந்தியாவில் சுமார் 8 கோடி மக்களாலும் பேசப்படும் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நாம். தமிழை நாம் ஒரு மொழியாக மட்டும் கருதுவதில்லை. அது நம்முடைய உணர்வோடும், உயிரோடும், அடையாளத்தோடும் கலந்திருக்கிறது. தமிழ் என்று வந்துவிட்டால் நமக்கு ஒரு தனி உணர்வும், வேகமும் கிடைக்கிறது. சாதி, மதம், கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து தமிழர்களாக ஒன்றுபடச் செய்யும் வலிமை தமிழுக்கு இருக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க தமிழ், நமது அலுவலகப் பயன்பாட்டில் மட்டுமன்றி, ஆட்சி, கல்வி, தொழில்துறை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய அரசு தமிழுக்கு கிளாசிக்கல் லாங்குவேஜ் எனப்படும் செம்மொழி என்ற சிறப்புத் தகுதியை வழங்கியுள்ளது. தமிழை வளர்ப்பதும், பாதுகாப்பதும் நமது கடமை மட்டுமல்ல உலகில் சிறப்புமிக்க மொழிகளில் ஒன்றாக விளங்கும் தமிழை மேலும் வளர்த்து, அதன் பெருமையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்பது நமது பொறுப்பு. தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம், 1956-ன் பிரிவு 2, The official language of the State of Tamil Nadu shall be Tamil என்று தெளிவாக அறிவிக்கிறது. மேற்கண்ட சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ், குறிப்பிட்ட ஆட்சி பணிகளுக்கு தமிழைப் பயன்படுத்த அரசு அறிவிப்புகள் மூலம் உத்தரவிடலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதிலும் முக்கியமாக, மேற்படி சட்டத்தில் 1956 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட திருத்தங்களின் மூலம், உயர்நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள், வாடகை நீதிமன்றங்கள் மற்றும் பிற நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளைப் பதிவு செய்வது, தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் மற்றும் உத்தரவுகளை தமிழிலேயே வழங்குவதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் ஏற்கனவே சட்டரீதியான நீதிமன்ற மொழியாக உள்ளது.
அந்த நீதிமன்ற அமைப்பின் மாநிலத்தின் உச்ச நீதிமன்றமான சென்னை உயர்நீதிமன்றத்திலும் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வோடு அது கொண்டுள்ள தொடர்பை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றத்திலும் தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். தமிழ் மொழி ஆட்சி மொழியாக மட்டுமல்லாமல், நீதிமன்ற மொழியாகவும் முழுமையான பயன்பாட்டைப் பெற வேண்டும் என்பதே தமிழர்கள் அனைவரின் நீண்டகால எதிர்பார்ப்பாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் Article 348(1)-ன்படி, இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் அனைத்து உயர்நீதிமன்றங்களின் நடவடிக்கைகளில் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே Article 348(2)-ன்படி, மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன், அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியை மாநில உயர்நீதிமன்ற வழக்குகளில், அதாவது நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்கு அதிகாரம் வழங்க முடியும் என்று தெரிவிக்கிறது.
மேலும், ஆட்சி மொழிகள் சட்டம், 1963 பிரிவு 7 லும் மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன், மாநிலத்தின் ஆட்சி மொழியை ஆங்கிலத்துடன் கூடுதலாக உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்துவதற்கு அதிகாரம் வழங்க வழிவகுக்கிறது. அந்த மொழியில் வழங்கப்படும் தீர்ப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இணைக்கப்பட வேண்டும் என்று அந்தச் சட்டம் கூறுகிறது.
எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த சட்டமன்ற விவாதங்களிலும், தமிழ் பயன்படுத்துவது ஆங்கிலத்தை அகற்றும் நடவடிக்கை அல்லமாறாக, ஆங்கிலத்துடன் கூடுதலாக தமிழைப் பயன்படுத்தும் நடவடிக்கை என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டது. ஆனால், பின்னர் இந்திய அரசின் நடவடிக்கைகளின் காரணமாக இந்த முயற்சி முன்னேறவில்லை.
காலம் மாறிக்கொண்டிருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. நவீன முறைகள், வசதிகள், மொழிபெயர்ப்பு தொழில்நுட்பங்கள், தமிழில் சட்டக் கல்வி மற்றும் சட்டக் கலைச்சொற்கள் ஆகியவை தற்போது பெருமளவில் வளர்ந்துள்ளன. எனவே, இந்த புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை கருத்தில் கொண்டு, தற்போதைய சட்ட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திட இந்திய அரசை இந்தப் பேரவை வலியுறுத்த வேண்டும்.
ஒரு சாதாரண குடிமகன் தனது வாழ்நாள், குடும்பம், சொத்து, வேலை, வழக்கு மற்றும் நீதிமன்றத்தில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்து என்ன நடக்கிறது என்பதை தனது தாய்மொழியில் புரிந்துகொள்ள முடிய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நீதி வழங்குவதும், நீதியைப் பெறுவதும் மேலும் வலுப்படும்.
நீதி பரிபாலனத்தில் மக்களும், அவர்களின் தாய்மொழியும் பங்கெடுப்பதால், நீதியின் செயல்முறை மேலும் வலுப்பெறும். முடியாதது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை நெறி அல்ல. தமிழ்நாட்டில் மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை சென்னை உயர்நீதிமன்றத்திலும் விரிவுபடுத்துவது ஒரு இயல்பான அடுத்த கட்டமாகும். எனவே, தமிழ் மொழியை சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டும். தமிழில் பணிகள், ஆவணங்கள் மற்றும் வாதங்களை சமர்ப்பிப்பதற்கான நடைமுறையை செயல்படுத்த வேண்டும்.
இதற்காக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்களுக்கான சட்டத் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு பயிற்சி முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் Article 348(2) மற்றும் ஆட்சி மொழிகள் சட்டத்தின் கீழ், மாநில ஆளுநர் அவர்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகளின் மீது தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இந்தப் பேரவை கோருகிறது.
இது தனிக்கோரிக்கை அல்ல பன்மொழிச் சமூகத்தின் கோரிக்கை. இது ஆங்கிலத்தை அகற்றும் கோரிக்கை அல்ல. இது தமிழுக்கு உரிய அரசியல் மற்றும் சட்ட வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதற்கான கோரிக்கை. தமிழ்நாடு சட்டமன்றத்தின் மூலமாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அதிகாரப்பூர்வ நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தப் பேரவையில் நான் முன்மொழிகிறேன். இந்தத் தீர்மானத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்” என்றார்.




