“திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த மக்கள்” – உதயநிதி ஸ்டாலின் உரை !

திமுக கூட்டணிக்கு ஏற்கனவே தமிழ்நாடு மக்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளனர் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 30 ஜோடிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சென்னை மேயர் பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து திருமணம் ஆன தம்பதிகளுக்கு கட்டில், பீரோ என ரூ.60,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள், 4 கிராம் தங்க தாலி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

“தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 30 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடத்துவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அப்பொழுது கிடைக்கிற உற்சாகத்தை விட இந்த திருமண நிகழ்ச்சியின் போது கூடுதல் மகிழ்ச்சி உண்டாகும்.

காதலர் தினம் என்று சொன்னால் சிலருக்கு கோபம் வரும். காதலர் தினத்தை கொண்டாடக்கூடாது என கூறுவார்கள். காதலை கொண்டாடாமல் இருக்க முடியுமா? ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான். நல்ல காதலர்களாக, நண்பர்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், 30 இணையர்களுக்கும் வாழ்க்கைக்கு தேவையான தலா ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள அனைத்து பொருட்களும் அரசு வழங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் தான் நடந்திருக்கிறது. ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சர் தலைமையிலான திமுக கூட்டணிக்கு கொடுத்து சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இந்த கருத்து கணிப்பு பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது, இன்னும் அதிகமான வேகத்தை கொடுக்கிறது, இன்னும் அதிக மக்களுக்கு பணியாற்ற உத்வேகம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.