பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ’தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்னும் சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று உதகை ஏடிசி பகுதியில் பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை,
தமிழகத்தில் 2026 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வேண்டாம் என்ற ஒற்றைக் கருத்தில் மக்கள் உள்ளனர்.
இந்த திமுக ஆட்சியில் யாருக்கும் ஒரு பைசா லாபமோ, பயனோ கிடையாது. திமுக சார்பில் 2026 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளிப்பதற்கான கூட்டம் கனிமொழி தலைமையில் நேற்று நடைபெற்றது.
கடந்த 2021ம் தேர்தலில் திமுக சார்பில் 511 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவற்றில் 54 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால் திமுக 2026 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி அளிப்பதற்கான குழுவை கனிமொழி தலைமையில் அமைத்துள்ளது. இது ஆட்சியா அல்லது டிராமா கம்பெனியா…? திமுகவை பொறுத்த வரை அது தினமும் டிராமா நடத்தும் டிராமா கம்பெனி.
திமுக கூறிய மூன்று தேர்தல் வாக்குறுதிகளை நான் உங்களுக்கு சுட்டி காட்டுகிறேன். திமுகவின் தேர்தல் வாக்குறுதி 356ன்படி ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களை நிரந்தரமாக்க வேண்டும். ஆனால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடந்த மூன்று நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதி 311ன் படி சம வேலைக்கு, சம ஊதியம் கோரி எத்தனையோ ஆசிரியர்கள் இன்று போராடிக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஆசிரியர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
திமுக தேர்தல் வாக்குறுதி 177ன் படி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். ஆனால் அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மூன்று வாக்குறுதிகள் சம்பந்தமாக கடந்த மூன்று நாட்களாக போராடிவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அப்படி இருக்கும்போது 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார்” என்றார்.







