நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கடந்து வந்த பாதை!!

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரானது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் இந்த தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு முன்னாள் சாம்பியன்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக 5 முறை ஐபிஎல் கோப்பையை…

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரானது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் இந்த தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு முன்னாள் சாம்பியன்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக 5 முறை ஐபிஎல் கோப்பையை தட்டிச்சென்ற மும்பை அணியும், 4 முறை கோப்பையை வென்ற சென்னை அணியும் தொடர்ந்து சொதப்பி வருகின்றன.

இந்த நிலையில் புதிதாக களமிறங்கிய குஜராத் மற்றும் லக்னோ அணிகள் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி தங்களை எப்போதும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் வைத்துக்கொள்ள போட்டிபோட்டுக் கொண்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடரில் பெரும்பான்மையான ரசிகர்களை கொண்ட இரு அணிகள் தொடர்ந்து தோல்வியை மட்டுமே பெறுவது ஏன் என்ற கேள்விகள், ஐபிஎல் ரசிகர்கள் தொடர்ந்து கிரிக்கெட்டை பிடிக்காதவர்கள் வரை பரவலாக பேசப்பட்டு வருகிறது.

2008ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை பல போட்டிகளை பார்த்துவிட்ட சென்னை அணி ஏன் தொடர்ச்சியாக வரலாற்றில் இல்லாத அளவுக்கு தோல்வியை மட்டுமே சந்திக்கின்றன என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. மும்பை அணியின் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சென்னை அணியின் தோல்விக்கு சொல்லப்படும் காரணம் சற்று வினோதமானதாகவே பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடங்கிய ஆண்டு முதல் தோனியே நீடித்து வந்தார். ஆனால் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாக தோனி தனது கேப்டன் பொறுப்பை ஆல் ரவுண்டராக கலக்கும் ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். இதுவரை தோனியை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடிய அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் ஏமாற்றத்துடனும், மறுபக்கம் இதுதான் தலைமைப் பண்பு என்று சிலாகித்துக்கொண்டே ஐபிஎல் தொடரை வரவேற்றனர்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் களம் கண்டன. டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த கொல்கத்தா அணி 131 ரன்களிலேயே சிஎஸ்கேவை முடக்கியது. தொடரின் முதல் போட்டியிலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி அரை சதம் அடித்தார். கடைசி பந்தில் ஜடேஜா சிக்சரை விளாசியிருந்தாலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த கொல்கத்தா 18 ஓவர்களிலேயே தேவைப்பட்ட ரன்களை எடுத்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. முதல் போட்டியில் சிஎஸ்கே சந்தித்த தோல்வி ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. அம்பத்தி ராயுடு மற்றும் ராபின் உத்தப்பா தங்கள் பங்கிற்கு 15, 28 ரன்கள் அடித்திருந்தாலும் ஆட்டத்தில் அதிக ரன்களை முன்னாள் கேப்டனாக மாறியிருந்த தோனி பெற்றிருந்தார். அடுத்தடுத்த போட்டிகளில் வென்றுவிடலாம் என்று கனவு காண தொடங்கிய ரசிகர்களுக்கு சென்னையின் அடுத்த போட்டியும் ஏமாற்றத்தையே பரிசளித்தது.

புதிய அணியாக களமிறங்கிய லக்னோவுடன் மோதிய சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 210 என்ற டீசண்டான ஸ்கோரை எடுத்தது. இரண்டாவதாக விளையாடிய லக்னோ அணி 3 பந்துகள் மீதம் இருக்கும்போதே 211 ரன்களை எடுத்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. சென்னை அணியினருக்கும், ஜடேஜாவின் ரசிகர் பட்டாளத்துக்கும் இரண்டாவது போட்டி ஏமாற்றத்தை கொடுக்க, இரு தரப்பினரும் அடுத்த போட்டியை நோக்கி அமைதியாக நகர்ந்திருந்தனர். இந்த போட்டியில் ராபின் உத்தப்பா 50 ரன்களையும், சிவம் துபே 49 ரன்களையும் எடுத்து தங்களது பணியை செவ்வனே செய்திருந்தனர்.

2021ம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரை ஆல் ரவுண்டராக கலக்கிக்கொண்டிருந்த ஜடேஜா தனது ஆட்டத்தையும் ஆட முடியாமல், கேப்டனாகவும் அணியை வெற்றிபெற செய்ய முடியாமல் தடுமாறினார். சரி மூன்றாவது போட்டியிலாவது வெற்றிபெறலாம் என்று இறங்கிய சென்னை அணி இரண்டாவதாக பேட்டிங் செய்திருந்தாலும் 180 ரன்களை நோக்கி பயணித்து 126 ரன்களிலேயே சுருண்டது. கடைசி பந்துவரை தோனியிடம் இருந்து சிக்சர்களை எதிர்பார்த்து டீவி ரிமோட்டையும், செல்போனையும் இறுக்கிப் பிடித்திருந்த ரசிகர்கள் மோசமான தோல்வியால் வெறுப்பின் உச்சத்திற்கு சென்றனர்.

தொடரின் 17வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியுடன் தனது 4வது போட்டியில் மோதிய சென்னை அணி டாஸில் தோல்வியடைந்ததால் பேட்டிங் செய்தது. தட்டுத்தடுமாறி 154 ரன்களுடன் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது சென்னை அணி. எம்ஜிஆர் படங்களில் வருவதை போல, 3 முறை அடிகளை வாங்கிக்கொண்டு எப்படி எம்ஜிஆர் எதிரியை துவைத்து எடுப்பாரோ அப்படி சென்னை அணியும் துவைக்கும் என்று எதிர்பார்ப்பிலும், சக நண்பர்களுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்ட ரசிகர்களுக்கு 4வது முறை தோல்வி எரிச்சலை ஏற்படுத்தியது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிசயங்களை தொடர் தோல்விகளை கொடுத்து சாத்தியமாக்கியது சென்னை அணி. ஆல்ரவுண்டர் ஜடேஜாவின் ரசிகர்களும் உண்மையில் சென்னையின் அசத்தல் தோல்விகளால் ஆட்டம் கண்டிருந்தனர்.

இனி சென்னை அணியின் போட்டிகளை காண்பதாக இல்லை என்று முடிவெடுத்த பலருக்கு அதிர்ச்சியை பரிசளித்தது சென்னை அணி. ஆம், பெங்களூரு அணியை எதிர்கொண்ட சென்னை டாஸை தோற்ற நிலையில் பேட்டிங்கை முதலில் செய்தனர், இந்த போட்டியில் சிவம் துபே தனது அதிரடியான ஆட்டத்தால் 46 பந்துகளில் 95 ரன்களை விளாசியிருந்தார். ராபின் உத்தப்பாவும் தன் பங்கிற்கு 50 பந்துகளில் 88 ரன்களை எடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தார். 200 ரன்கள் எடுத்தாலும் நீங்கள் தோற்கத்தானே போகிறீர்கள் என்று பேசிய ரசிகர்களின் வாயை, 216 ரன்களை எடுத்து, பெங்களூருவை 200 ரன்களுக்குள் முடக்கி வெற்றிபெற்றனர் சென்னை அணியினர். தோல்வியையே சந்தித்து வந்த ஜடேஜா தனது கேப்டன்ஷிப்பில் முதல் வெற்றியை பதிவு செய்தார். தொடர்ந்து 6வது போட்டியில் நம்பிக்கையுடன் ஆடியவர்கள் குஜராத் அணியின் அடியால் துவண்டு விழுந்தனர். தொடரில் முதல்முறையாக மும்பை அணியை 33வது ஐபிஎல் ஆட்டத்தில் எதிர்கொண்ட சென்னை தனது இரண்டாவது வெற்றிக்காக போராடியது. இந்த நிலையில் முதல்வெற்றியையாவது பதிவு செய்ய மாட்டோமா என்று எதிர் அணியில் போராடிய மும்பை இறுதியில் தோல்வியை சந்திக்க, இரண்டாவது வெற்றிக்களிப்பில் மூழ்கினர் சென்னை ரசிகர்கள்.

அடுத்தாவதாக பஞ்சாப் அணியிடம் மோதிய சென்னை தோல்வியடைந்த நிலையில், அணியின் கேப்டனை மாற்றியமைத்தது சிஎஸ்கே நிர்வாகம். 2 வெற்றிகளை மட்டுமே கொடுத்த கேப்டன் ஜடேஜா ராசியில்லாதவர் என்ற பட்டத்தையும், தனது ஆட்டத்தை சரிவர ஆடவில்லை என்ற விமர்சனத்தை பெற்றார். அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்கினார் தோனி. தொடரில் பல தோல்விகளை கண்ட அணியும், ரசிகர்களும் பரஸ்பரம் மகிழ்ச்சியடைந்தனர். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் ருதுராஜ் 99 ரன்களை எடுத்த நிலையில், கான்வே 85 ரன்களையும் எடுத்து அசத்தினார். 7 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே எடுத்து கேப்டன் தோனி ஆட்டமிழந்திருந்தாலும், ஆட்டத்திம் இறுதியில் அணியை வெற்றிப்பக்கம் நோக்கி தள்ளியிருந்தார் தல தோனி. இந்த இடத்தில்தான் தங்களது நாயகனை கொண்டாடினர் ரசிகர்கள்.

இதனைத் தொடர்ந்து ஜடேஜாவை பற்றி தோனி பேசுகையில், கேப்டன்சியால் ஜடேஜாவின் ஆட்டம் பாதிக்கிறது. ஆல்ரவுண்டர் ஜடேஜாதான் அணிக்கு தேவை என்று தெரிவித்திருந்தார். இந்த கூற்றை உண்மையாக்கும் வகையில்தான் ஜடேஜாவும் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆடியுள்ளார். இதுவரை நடந்த போட்டிகளில் பங்கேற்ற ஜடேஜா 112 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். இந்த நிலையில்தான் தங்களது அடுத்த போட்டியில் பெங்களூருவுடன் இன்று களம் காண்கின்றனர் சென்னை அணியினர். சிஎஸ்கே இந்த தொடரில் வெற்றிபெறுவார்களா, மாட்டார்களா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ள நிலையில், அடுத்த 5 போட்டிகளிலும் சென்னை வெற்றிபெற்றால் மட்டுமே சென்னை அணி ப்ளே ஆபில் நுழைய வாய்ப்புள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு, 2022 கோப்பை யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்…

எழுத்து; யுவராம் பரமசிவம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.