ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயம் வரும்..ஆனால்..!

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் வெளியாகும் போது 30 வயதில் இருந்தவர்கள் எல்லாம் தற்போது 50 நோக்கை வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். படம் வெளியாகி படபடவென 12 ஆண்டுகளை கடந்துவிட்டது. காதல், நட்பு, காமம், குடும்பம்…

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் வெளியாகும் போது 30 வயதில் இருந்தவர்கள் எல்லாம் தற்போது 50 நோக்கை வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். படம் வெளியாகி படபடவென 12 ஆண்டுகளை கடந்துவிட்டது. காதல், நட்பு, காமம், குடும்பம் என மனித உணர்வுகளையும் சிக்கல்களையும் மையமாக கொண்டு படம் எடுத்துவந்த செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவனில் ஹாலிவுட் டச்-ஐ கொடுத்தார். சோழ-பாண்டியர்களின் வரலாற்றில் அப்படியே ஹாலிவுட்டின் இண்டியானா ஜோன்ஸ்,அட்லாண்டிஸ் ஆகிய படங்களை கலந்தடித்து, உடன் பல மாயாஜால காட்சிகளையும் சேர்த்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புது ட்ரீட்-ஐ வைத்தார்.

தமிழ் சினிமாவில் கமல் போலவே செல்வராகவனை சுற்றியும் ஒரு Epic ஆன ஃபார்முலா கட்டமைக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் வெளியாகும் போது இவர்களின் பெரும்பாலான படங்கள் வசூல் ரீதியாக சரியாக ஓடாது! ஆனால் ஆண்டுகள் பல கடந்து மக்களின் மனங்களிலும், கணினியிலும், வீட்டு அலமாரிகளிலும் இவர்களின் படங்கள் நீங்காத இடம் பிடிக்கும். பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆர்யா தன் கையில்  கட்டு கட்டாக  இருக்கும் பணத்தை பின்னால் வைத்துவிட்டு, ‘எனக்காக நீ எவ்ளோவோ செஞ்சிருக்க, ஆனா உனக்கு கொடுக்க எங்கிட்ட ஒன்னுமே இல்லையேடா!’ என கூறி சந்தானத்தை வெறுப்பேற்றுவார். அது போலவேதான் தமிழ் சினிமா ரசிகர்களும் கமல், செல்வராகவனை வெறுப்பேற்றி வருகிறார்கள் என்றே சொல்லலாம்.

செல்வராகவனின் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருத்தன் படங்கள் வெளியாகும் போது தியேட்டருக்கே போமாட்டேன் என்று அடம் பிடித்தவர்கள் பலரும், தற்போது அவர் செல்லுமிடமெல்லாம், ‘பாஸ் ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2’ எப்போ வரும்? அப்படியே அந்த
புதுப்பேட்டையையும் தூசு தட்டி இன்னொரு பார்ட்-ஐ எடுத்துடலாமே?” என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். புதுப்பேட்டை வெளியான சமயத்தில் எல்லாம் அதை திருட்டு VCD-யில் வாங்கி பார்க்க கூட ஆள் இல்லத அவலநிலையே இருந்தது. அது ஏன் உங்களுக்கு இவ்ளோ லேட்டா படம் பிடிக்கிறது? என கேட்டால், ‘ செல்வா சார் எப்பவுமே ஜீனியஸ் தான் எங்களுக்குத்தான் லேட்டா  மெச்சூரிட்டி வந்துருக்கு’ என ஒரு பிட்டை போடுவார்கள்.

இதை சீரியஸாக எடுத்துக்கொண்டு ‘ஓஹோ’ அப்படியென்றால் படம் வெளியாகி ஆண்டுகள் பல கடந்த பிறகுதான் இவர்களுக்கு ‘மெச்சூரிட்டி’ வந்து என் படங்கள் பிடிக்கிறதோ! என செல்வா சார்  ஆழ்ந்து யோசித்தாரோ என்னவோ! .. அதன் விளைவாக, இனிமேல் நாமும் ஒரு திரைக்கதையை முடித்தவுடன் 5 ஆண்டுகளோ, 10 ஆண்டுகளோ கழித்து படமாக்கி வெளியிடுவோம், அப்படி செய்யும் போது ஆடியன்ஸின் மெச்சூரிட்டியும், நம்ம கிரியேட்டிவிட்டியும் சமனாகிவிடும்.. படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிடும் எனும் முடிவுக்கு வந்தாரோ அதுவும் தெரியவில்லை. செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் கழித்து தான் திரைக்கே வந்தது. இருந்தும் Mission Failed. ஆடியன்ஸுக்கு இந்த 5 ஆண்டு போதவில்லை போல!

இப்படி ஒரு சூழலில் தான் ஆயிரத்தி ஒருவன் பார்ட்-2, 2014ஆம் ஆண்டு திரைக்கு வரும் என செல்வராகவன் ட்வீட் போட, அப்படத்தில் கதாநாயகனாக நடிக்க விருக்கும் தனுஷ் அதை ரீட்வீட் செய்திருந்தார். படத்தினுடைய Pre-Production-க்கே ஒரு ஆண்டுகள் தேவை படும் எனவும், ரொம்ப நாட்கள் காத்திருக்க வேண்டி இருப்பினும் எங்களுடைய சிறப்பான பங்களிப்புடன் இளவரசன் வருவான் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2011ம் ஆண்டே ஆயிரத்தில் ஒருவனுக்கான திரைக்கதை தயாராகவிட்டதாக செல்வராகவன் ட்வீட் போட்டிருந்தார். அப்படியிருக்க ஏன் இத்தனை இடைவேளி எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.

செல்வராகவன், சமீபத்தில் நம்முடைய CINEMAX நிகழ்ச்சியில் சாணிக்காயிதம் படம் தொடர்பாக பேட்டி கொடுத்திருந்தார். அப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது வரும் எனும் கேள்வி  முன்வைக்கப்பட்ட போது ‘அது நடிகர் கார்த்தி கையிலேயும், ப்ரொடியூசர் கையிலேயும் தான் இருக்கு. but கண்டிப்பா நடக்கும் ..நடக்கும்னு நம்புறேன்’ என கூலாக பதில் சொல்லியிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள், ’இதென்ன! வரும்…ஆனா வராது!’ என்பது போல் உள்ளதே என ஜெர்க் ஆகத்தொடங்கினார்கள். ஆனால், உண்மையில் ஆயிரத்தில் ஒருவன் 2 வருவது ஆடியன்ஸான நம் கையில் தான் உள்ளது.

நிற்க, செல்வராகவனின் Romance Adventure Fantasy படமான இரண்டாம் உலகம் கடந்த 2013ம் ஆண்டு வெளியானது. வழக்கம் போல் வெளியான சமயத்தில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அப்படத்திற்கு போதிய வரவேற்பு.. இல்லை இல்லை சுத்தமாக வரவேற்பே கிடைக்கவில்லை. முன்பு குறிப்பிட்டது போல் தமிழ் சினிமா ரசிகர்கர்களின் ரசனையானது செல்வராகவனின் சிந்தனையோடு Sync ஆவதற்கு ஆண்டுகள் பல ஆகுமல்லவா? எனவே அதை சோதிக்கும் வகையில் 5 ஆண்டு காலத்தாமதத்தை டார்கெட் ஆக வைத்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தை வெளியிட்டார்கள் ஆனால் ஓடவில்லை எனவும், அடுத்ததாக ‘இரண்டாம் உலகம்’ திரைப்படத்தைக் கொண்டு 10 ஆண்டுகள் டார்கெட் வைத்துள்ளார்கள் எனவும் சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் 2013ம் ஆண்டு வெளியான ‘இரண்டாம் உலகம்’ 2023ம் ஆண்டுக்குள் மக்களால் கொண்டாடப்பட்டால், உடனே ஆயிரத்தில் ஒருவனுக்கான Production வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிடுமாம். எனவே தான் 2014 ஆம் ஆண்டில் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள் என்று கூறுகின்றனர் சினிமா வல்லுநர்கள்.

ஆக, ஆயிரத்தில் ஒருவனின் பார்ட்-2வை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் வெறித்தனமான ரசிக பெருமக்களே! அந்த படத்தை நாம் தரிசிக்க வேண்டுமானால் உடனே செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்தை போற்றி கொண்டாடக்த்துவங்க வேண்டும். ட்விட்டர் பேஸ்புக்குகளில் இரண்டாம் உலகம் படத்தின் அழகியல் பற்றியும், அதில் இடம்பெற்ற காதல் காட்சிகளின் மாண்புகளை பற்றியும், மனித ஆழ் மன இருத்தலியலின் புற வெளிப்பாட்டு நிறையை பற்றியும், பிரபஞ்சத்தின் பிளவுகள் பற்றியும் நாம் ஆய்வு செய்து கொண்டாடி தீர்க வேண்டும். புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போல ‘இரண்டாம் உலகம்’ படத்தையும் நாம் கொண்டாடத்தொடங்கும் புள்ளியில் தான் ஆயிரத்தில் ஒருவன் பார்ட்-2 தொடங்கப்படும் என்பதை கணித்துக்கொண்டு இத்துடன் இக்கட்டுரையை முடித்துக்கொள்கிறோம். நன்றி வணக்கம்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.