தருமபுர ஆதினத்தை நானே தோளில் சுமப்பேன்: அண்ணாமலை

தருமபுர ஆதினத்தை நானே தோளில் சுமப்பேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் வருடந்தோறும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆதீன மடாதிபதியை பல்லக்கில்…

தருமபுர ஆதினத்தை நானே தோளில் சுமப்பேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் வருடந்தோறும்
பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆதீன மடாதிபதியை பல்லக்கில்
அமர்த்தி மனிதர்கள் தூக்கிச் செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று திராவிடர்
கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திட
உள்ளதாகவும், அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை
ஏற்படும் எனக் கூறி பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதின மடாதிபதியை பல்லக்கில் அமர
வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி
உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு மதுரை ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம்,
உள்ளிட்ட பல்வேறு ஆதீனகர்த்தர்கள் மற்றும் ஆன்மீக பேரவைகள் கண்டனம்
தெரிவித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

 

இந்நிலையில், பாஜக தலைவர் தனது ட்விட்டர் பதிவில், தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். தமிழக பாஜக இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.