“நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த குழு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல” சென்னை உயர்நீதிமன்றம்

நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த குழு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது இல்லையென சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய…

நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த குழு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது இல்லையென சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை நியமித்திருந்தது. இதை எதிர்த்து பாஜகவின் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான இன்றைய விசாரணையில், நீட் பாதிப்புகள் குறித்து குழு அமைத்த தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பானணை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல என்று தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்த குழுவை அமைத்துள்ளது, பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க முடியும். மாநில அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது . இதுசம்பந்தமாக உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்கும் என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

எதிர் தரப்பில், மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்த தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி, நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதனை குறுக்கிட்டு பேசிய தலைமை நீதிபதி அமர்வு, “நீட் பாதிப்பு சம்பந்தமாக தமிழக அரசு மக்களிடம் கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்?” என கரு.நாகராஜனுக்கு கேள்வியெழுப்பியுள்ளது. மேலும், “நீட் தேர்வு தொடர்பான மக்களின் கருத்துகளையோ, அல்லது பாதிப்பு தொடர்பாகவோ மத்திய அரசிடம் சமர்ப்பிக்க மாநில அரசு கமிட்டி அமைத்திருக்கலாம். நீங்களாகவே ஏன் முன்முடிவு எடுத்து எடுத்து கொள்கிறீர்கள். இந்த வழக்கு தொடுத்ததன் மூலம் கரு.நாகராஜனுக்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது.” என்றும் நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது.

நடப்பாண்டில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.