நடிகர் விஜய், தான் வாங்கிய சொகுசு காருக்கு வரி விலக்கு அளிக்கக் கோரிய வழக்கில், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு காரை இங்கிலாந்தில் இருந்து நடிகர் விஜய் இந்தியாவிற்கு இறக்குமதி செய்து வாங்கினார். இறக்குமதி வரியாக அந்த சொகுசு காரின் விலையில் இருந்து 20% கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.
நடிகர் விஜய், அந்த காருக்கு விதிக்கப்பட்டிருந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் அந்த வழக்கை நீதிபதி சுப்ரமணியன் அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் தமிழ்நாட்டு திரையுலகில் ஆட்சி செய்து வருகின்றனர்.
இவரை முன்னோடியாக எடுத்துக் கொண்டு பல இளைஞர்கள், இவரைப் பின்பற்றி நடக்கிறார்கள். அந்நிலையில், நடிகர் விஜய் வரி ஏய்ப்பில் ஈடுபட நினைப்பது கண்டிக்கதக்கது மட்டுமல்லாம் சட்டத்திற்கு விரோதமானதாகும் எனக் கூறிய நீதிபதிகள், வரி ஏய்ப்பு செய்ய நினைப்பது தேச துரோகமாகக் கூட கருதலாம் எனத் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இந்த வழக்கில், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அந்த அபராத தொகை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்படும் எனத் தெரிவிகக்ப்பட்டுள்ளது.
மேலும் அவர் வாங்கிய காருக்கான இறக்குமதி வரியை இரண்டு வாரங்களில் செலுத்துக்கோரி உத்தரவிடப்பட்டு, நடிகர் விஜயின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.







