கவிதை படைக்கத் தொடங்கிய நாள் முதல் இன்றைய ட்விட்டர் டிரெண்டிங் காலம் வரை, தனது வைர வரிகளால் பாடலுக்கு தேன்சுவை ஊட்டும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் இன்று…
“வானமகள் நாணுகிறாள்.. வேறு உடை பூணுகிறாள்..”சூரியன் மறையும் மாலை பொழுதை, பெண்ணின் நாணத்தோடு கலந்து, முதல் பாடலிலேயே, தன் வார்த்தை ஜாலங்களை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தவர் வைரமுத்து..
1953 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி, தேனி மாவட்டம் வடுகபட்டியில், விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வைரமுத்து. 1980 ஆம் ஆண்டு, “நிழல்கள்” திரைப்படத்தில் இது ஒரு பொன்மாலை பொழுது எனும் பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்
முதல் பாடலிலேயே, அனைவரும் முணுமுணுக்கும் வரிகளை கொடுத்தார் வைரமுத்து. அதன்பின்னர், அவர் எழுதிய காதல் டூயட்கள், சோகப் பாடல்கள், கண்ணதாசன் வாலி என இருபெரும் கவிஞர்களுக்கு அடுத்த இடத்தை பெற்று தந்தது.
எப்போதும் வெள்ளை நிற ஜிப்பா அணிவதை தன் அடையாளமாகவே மாற்றினார் வைரமுத்து. தன் பாடல்களில் புதுமைகளை புகுத்தி, வட்டார வழக்கில் வலியை பதிவு செய்யும் வல்லமை கொண்டவராக திகழ்கிறார் வைரமுத்து.
“கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் வைரமுத்து எழுதியிருந்த, ’விடை கொடு எங்கள் நாடே’ பாடல், நாட்டையோ, பிறப்பிடத்தையோ விட்டு பிரியும் ஒவ்வொருவரின் ஏக்க குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
பாடல் மட்டுமின்றி, கதைகள், கட்டுரைகள், புத்தகங்களையும் எழுதியுள்ளார். கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கட்டிப்போட்டார் வைரமுத்து.
“நாட்படு தேறல்” எனும் தலைப்பில், 100 வெவ்வேறு இசையமைப்பாளர்களை கொண்டு 100 பாடல்களை எழுதி, யூடியூப்பில் பதிவேற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். திரையுலகில் இவரது சேவையை பாராட்டி, 7 முறை தேசிய விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது மத்திய அரசு. இதேபோல் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும் 6 முறை பெற்றுள்ளார்.
முத்து மாலையில் வைரம் பதிப்பதை போல், பின்னணி இசையில், தன் மந்திர வரிகளை பதிய செய்பவர் வைரமுத்து…







