தமிழ்நாட்டில் ஒரே எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே செயல்படுவதாகச் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் பாவலேறு பெருஞ்சித்தனார் நினைவுதினம் நெல்லை ரஹ்மத் நகரில் அனுசரிக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பெருஞ்சித்தனார் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதமாதல்களைத் தூண்டி, தூண்டி நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயல்வதாகக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சர்வதேச அரங்கில் இந்தியாவின் கடன் 90 லட்சம் கோடி அதிகரித்துள்ளது எனவும், 7000 கோடி ரூபாயை இந்தியா இலங்கைக்குக் கொடுப்பதால் என்ன பயன் எனக் கேள்வி எழுப்பினார். மேலும், சீனாவின் ஒரு மாகாணமாக இலங்கை மாற்றிவிட்டது எனத் தெரிவித்த அவர், இலங்கையில் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகையில் கூட சீன எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக விமர்சனம் செய்தார்.
மேலும், 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையிலிருந்த திமுகவிற்கு கட்சதீவை மீட்க நேரம் கிடைக்கவில்லை எனவும், இலங்கையை விட மோசமான நிலைக்கு இந்தியா தள்ளபட்டுகொண்டிருப்பதாகவும், அதிகாரத்தில் இருப்பவர்கள் அதனை மறைக்கும் நினைக்கிறார்கள் எனக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’
மத்திய அரசின் 8 ஆண்டுக்காலமும் தமிழ்நாடு அரசின் ஓராண்டுக் காலமும் சாதனையல்ல வேதனை, சோதனை எனக் குறிப்பிட்ட அவர், ஓராண்டு திமுக ஆட்சியின் ஊழலைக் கேட்கும் அண்ணாமலை அதிமுகவின் 10 ஆண்டுக் கால ஆட்சியின் ஊழல் குறித்துக் கேட்கவில்லை என விமர்சித்தார். மேலும், 2024-ல் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுடன் கூட்டணி அமைக்காமல் இருப்பார்களா எனவும் கேள்வி எழுப்பினர். 8 ஆண்டு மத்திய அரசு ஆட்சியில் ஊழலே இல்லை எனச் சொல்பவர்கள் ரஃபேல் போர் விமான விவகாரத்தில் 400 கோடி ஊழல் குறித்து வாய்திறக்கவில்லை எனவும், நீதிமன்றம் ரஃபேல் குறித்து கேள்வி கேட்டதற்கும் பதிலும் அளிக்கவில்லை எனக் கூறினார்.
தமிழ்நாட்டின் ஒரே எதிர்க்கட்சிக்காக இருக்கும் நாம் தமிழர் கட்சி, 2024-ல் தனித்துப் போட்டியிடும் எனத் தெரிவித்த அவர், இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் வாக்குகளை நாம் தமிழர் கட்சிக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். அந்த வாக்குகள் கிடைத்தால் 7% லிருந்து 10% ஆக வாக்குவங்கி உயரும் எனக் குறிப்பிட்ட அவர், நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் தொடர்ந்து செய்வோம் எனத் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








