ஆற்காடு வீராசாமி சர்ச்சை – வருத்தம் தெரிவித்த அண்ணாமலை

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறித்து பொதுக்கூட்டத்தில் தாம் பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அவர் நீண்ட ஆயுளோடு வாழ்வதற்கு இறைவனை வேண்டுவதாக குறிப்பிட்டுள்ளார். நாமக்கலில் அண்மையில்…

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறித்து பொதுக்கூட்டத்தில் தாம் பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அவர் நீண்ட ஆயுளோடு வாழ்வதற்கு இறைவனை வேண்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.


நாமக்கலில் அண்மையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாகக் கூறி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், தனது தந்தை குறித்து தவறான கருத்து தெரிவித்த அண்ணாமலைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கலாநிதி வீராசாமி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

தனது தந்தை ஆற்காடு வீராசாமி நலமுடன் உள்ளதாகவும், கொள்ளுப்பேரனின் பிறந்தநாள் விழாவில் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு அவர் மகிழ்ந்ததாகவும் கலாநிதி வீராசாமி தெரிவித்திருந்தார். மேலும், என்ன பேசுகிறோம் அது உண்மையா இல்லையா என்று யோசிக்காமல் பேசுவதா என்றும் அண்ணாமலைக்கு கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்! நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன்!” என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.