பழமை மாறாமல் மாட்டு வண்டியில் ஊர்வலம் போன திருமண ஜோடி; குவியும் வாழ்த்து

மேலூர் அருகே திருமணம் முடிந்த கையோடு பழமை மாறாமல் மாட்டு வண்டியில் ஊர்வலம் போன புதுமண தம்பதிகளை பொதுமக்கள் வியந்து பார்த்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர்…

மேலூர் அருகே திருமணம் முடிந்த கையோடு பழமை மாறாமல் மாட்டு வண்டியில் ஊர்வலம் போன புதுமண தம்பதிகளை பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர்
ஆவின் நிறுவனத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இவருக்கும்
அருகிலுள்ள நாட்டார்மங்கலத்தை சேர்ந்த சிவரஞ்சனி என்பவருக்கும்  கீழையூரிலுள்ள மண்டபத்தில் இன்று திருமணம் நடந்தது.

மணமக்களை உறவினர்கள், நண்பர்கள் என வாழ்த்தி மகிழ்ந்த நிலையில், திருமணம்
முடிந்து வீட்டிற்கு செல்லும் போது பழமை மாறாத வகையில் மாட்டுவண்டி மூலம்
புதுமண தம்பதிகள் சென்றனர். புதுமாப்பிள்ளை கணேசன் மாட்டுவண்டியை ஓட்ட,
பின்னால் அமர்ந்துவந்த மனைவி சிவரஞ்சனி உற்சாகத்துடன் ஊர்வலம் சென்றனர்.

இந்த காட்சிகளை சாலையில் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வியந்து பார்த்தனர்.
மேலும் ஒருசிலர் தங்களது செல்போன்களில் புகைப்படங்களையும் எடுத்தனர்.
மாட்டுவண்டியில் பயணம் செய்த இந்த தம்பதியினர் பின் அங்குள்ள கோயில்களில்
வழிபாடு நடத்தி வீட்டிற்கு சென்றனர்.

வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக அவர்கள் வளர்க்கும் ஜல்லிகட்டு காளையின்
முன்பு வணங்கி வழிபட்ட பிறகே தம்பதியினர் வீட்டிற்குள் சென்றனர். இதுகுறித்து
புதுமாப்பிள்ளை கணேசன் கூறும்போது, எங்களது முன்னோர்களான தாத்தா கொள்ளுதாத்தா உள்ளிட்டோர் திருமணம் செய்த போது எவ்வாறு சென்றார்களோ அதை நினைவுகூறும் வகையிலும், நாங்கள் கால்நடைகளின் மீது வைத்துள்ள அன்பாலும் இதுபோல மாட்டுவண்டியில் பயணம் செய்ததாக தெரிவித்தார்.

இந்த பயணம் தனக்கு  புதுவித அனுபவத்தை  தந்ததாக புதுமணப்பெண் சிவரஞ்சனி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பழமையை நினைவுகூறும் வகையில்  அமைந்த இந்த தம்பதியினர் செயல் இப்பகுதியில் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இந்த செயலுக்காக பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.