திருப்பூரில் தமிழ்நாட்டு இளைஞர்களை துரத்திய வடமாநில தொழிலாளர்கள் – நடந்தது என்ன?

திருப்பூரில் தமிழ்நாட்டு இளைஞர்களை 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அடித்துத் துரத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் கடந்த 14ஆம் தேதி பனியன் கம்பெனியில், பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில…

திருப்பூரில் தமிழ்நாட்டு இளைஞர்களை 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அடித்துத் துரத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் கடந்த 14ஆம் தேதி பனியன் கம்பெனியில், பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள், இடைவேளை நேரத்தில், கம்பெனிக்கு அருகில் இருந்த கடையில் புகைப்பிடித்துள்ளனர். அப்போது அங்கு மதுபோதையில் இருந்த தமிழ்நாட்டு இளைஞர்கள் 4 பேர், வடமாநில இளைஞர் தன் மீது சிகரெட் புகையை ஊதியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வடமாநில தொழிலாளியை 4 பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர்.

இதனைக் கண்ட மற்ற வடமாநில தொழிலாளர்கள், 4 தமிழ்நாட்டு இளைஞர்களையும் தாக்க துரத்தியுள்ளனர். அப்போது, அந்த வழியாக, வேலம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டு இளைஞர்கள் தப்பி ஓடி உள்ளனர். அதே போல் வடமாநில தொழிலாளர்களும் தங்களது பணிக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து யாரும் புகார் கொடுக்காத நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்நிலையில் இந்த சம்பவத்தை, அப்பகுதியில் இருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.