தொலைநோக்குடன் எதிர்கால வளர்ச்சியை ஏற்படுத்துவதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம்- பிரதமர் மோடி

தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய எதிர்க்காலத்துக்கான கல்வி முறையை ஏற்படுத்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பிரதமர் மோடி கூறினார். குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஸ்ரீசுவாமிநாராயண குருகுலத்தின் 75வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.…

தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய எதிர்க்காலத்துக்கான கல்வி முறையை ஏற்படுத்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பிரதமர் மோடி கூறினார்.

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஸ்ரீசுவாமிநாராயண குருகுலத்தின் 75வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு தேசிய கல்விக் கொள்கையும் கல்வி நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கவுள்ளன. அதை கருத்தில் கொண்டு கல்வித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், புதிய கொள்கைகளை உருவாக்கவும் மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.

கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி), இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐஐஎம்), எய்ம்ஸ் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 65 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் வாயிலாக நாட்டில் முதல் முறையாக தொலைநோக்கு பார்வையுடன் கூடிய எதிர்காலத்துக்கான கல்வி முறையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் இந்தியாவின் பாரம்பரிய பெருமையை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நாடு சுதந்திரமடைந்தவுடன் நமக்கு இருந்தது. ஆனால் அடிமை மனநிலையின் அழுத்தம் காரணமாக முந்தைய அரசுகள் அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ள இல்லை. சில விவகாரங்களில் அவர்கள் எடுத்த முடிவு நாட்டை எதிர்திசையில் பயணிக்க வைத்தது. அத்தகைய சூழலில் நாட்டை காக்கும் பொறுப்பை நமது துறவிகளும், ஆச்சர்யர்களும் கையில் எடுத்துக் கொண்டனர். ஸ்ரீசுவாமிநாராயண் குருகுலமே அதற்கு சிறந்த உதாரணம்.

ஆத்ம தத்துவம் முதல் பரமாத்ம தத்துவம் வரை, ஆன்மிகம் முதல் ஆயுர்வேதம் வரை, சமூக அறிவியல் முதல் சூரிய அறிவியல் வரை, கணிதம் முதல் உலோக அறிவியல் வரை அனைத்தையும் உலகுக்கு இந்தியா எடுத்துக்காட்டியது. பாலின சமத்துவம் என்ற சொற்றொடரே உருவாகத காலத்தில் இந்தியாவில், ஆண் அறிஞர்களுடன் பெண் அறிஞர்கள் விவாத்தில் ஈடுபட்டனர். கார்கி, மைத்ரேயி உள்ளிட்ட பெண் அறிஞர்கள் உருவாக குருகுலங்கள் முக்கிய பங்காற்றின.

உலகில் இருள் சூழ்ந்திருந்த காலத்தில் மனிதாபிமானத்துக்கு ஒளியை ஏற்றியது இந்தியா தான். அந்த ஒளியிலேயே நவீன உலகமும், அறிவியலும் பயணித்து வருகிறது. அறிவை எட்டுவதே வாழ்வின் உயரிய நோக்கம் என்ற கொள்கை இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மற்ற நாடுகள் அரசாட்சிகளின் மூலமாகவும், அரச குடும்பங்களின் மூலமாகவும் தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் நிலையில், இந்தியா குருகுலங்களை அடையாளமாக கொண்டுள்ளது.

சமத்துவம், பிணைப்பு, சேவை உள்ளிட்டவற்றை பல நூற்றாண்டுகளாக குருகுலங்கள் போதித்து வந்தன. இந்திய குருகுல பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைந்திருந்த நாளந்தா, தக்ஷசீலம் உள்ளிட்ட பல்கலைகழகங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கின. புதுமையும், ஆராய்ச்சியுமே இந்தியர்களின் வாழ்க்கை முறையாக இருந்தது. அத்தகைய புத்தாக்கங்களே தற்போதைய பன்முகத்தன்மைக்கும், கலாச்சார மேம்பாட்டுக்கும் முக்கிய காரணங்களாக திகழ்கின்றன. சிறந்த கல்வி முறையை பெரும் இளைஞர்கள், இந்தியாவை 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற முக்கிய பங்கு வகிப்பர் என்று பிரதமர் மோடி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.