தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணி நிலவரப்படி நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது சற்றே வலுவிழந்து மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை இலங்கை கடலோரப் பகுதிகளின் அருகில் நிலவக்கூடும். அதன் பிறகு மேலும் மேற்கு, தென்மேற்கு திசையில் நடந்தது இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை காலை நிலவ வாய்ப்புள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னனுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், குமரி கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.