பங்குனிப் பெருவிழாவையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் கைப்பாரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப்பெருவிழாவாகும். 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவில் 5 ஆம் நாளான இன்று கைப்பார உற்சவ திருவிழா நடைபெற்றது. இது திருப்பரங்குன்றம் கிராமத்தினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் கோயிலில் மிக அதிக எடை கொண்ட வெள்ளி யானை வாகனத்தைப் பக்தர்கள் தங்கள் உள்ளங்கைகளில் வைத்து தூக்கி வருவர். இத்திருவிழாவானது இந்திரனின் வெள்ளை யானையில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையோடு பறந்து வருவதை குறிக்கும் வகையில் இத்திருவிழா கொண்டாடப்படுவதாகக் கிராமத்தார் தெரிவிக்கின்றனர். இதனையொட்டி சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வெள்ளியானை வாகனத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து கொத்தாளத்து முக்கு பகுதியிலிருந்து கிராமத்தார் தங்களது உள்ளங்கைகளில் வாகனத்துடன் சுவாமியை பெரியரத வீதியிலிருந்து கோயில் வாசல் வரையும், பின்பு கோயில் வாசலிலிருந்து மீண்டும் பெரியரத வீதியில் தூக்கி சுவாமியை வீதி உலா புறமும், இடது புறமுமாக சாய்த்து பக்தர்கள் வெள்ளத்தில் எடுத்து வந்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் விழா ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.









