களமிறங்கும் ’மோடி மாம்பழம்’ – ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டது தெரியுமா??

சச்சின் டெண்டுல்கர் மாம்பழம், அமித்ஷா மாம்பழம் என சந்தைகளில் பிரபலங்களின் பெயர்களில் மாம்பழங்கள் பிரபலமாகி வரும் நிலையில், புதிதாக மோடி மாம்பழம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரக மாம்பழத்திற்கு எதற்கு இந்த பெயர்…

சச்சின் டெண்டுல்கர் மாம்பழம், அமித்ஷா மாம்பழம் என சந்தைகளில் பிரபலங்களின் பெயர்களில் மாம்பழங்கள் பிரபலமாகி வரும் நிலையில், புதிதாக மோடி மாம்பழம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரக மாம்பழத்திற்கு எதற்கு இந்த பெயர் வந்தது, இதன் சிறப்புகள் என்ன என்பதை தற்போது காணலாம்…

வெயில் காலம் என்றாலே நம்முடைய நினைவில் வரும் உணவுப்பொருட்களில் மாம்பழமும் ஒன்று. மாம்பழங்களில் மல்கோவா, அல்போன்சா, பங்கனபள்ளி என பல்வேறு ரகங்கள் உள்ளன. அந்த வரிசையில் புதிதாக மோடி மாம்பழமும் இணைந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மலிஹாபாத்தை சேர்ந்த மாம்பழ ஆராய்ச்சியாளர் உபேந்திரா சிங், பல்வேறு விதமான மாம்பழங்களை ஆராய்ச்சி செய்து வருகிறார். அந்த வகையில், ஆராய்ச்சியின்போது, புது விதமான மாம்பழம் ஒன்று அவருக்கு தென்பட்டுள்ளது. தனது 56 அங்குல மார்பை பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியது அப்போது நினைவுக்கு வந்தததால், உடனடியாக இந்த மாம்பழத்திற்கு மோடி பெயரையே வைக்க முடிவு செய்தார் உபேந்திர சிங்.

இதையடுத்து இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் மோடியின் பெயரில் இந்த புதிய ரக மாம்பழத்தை பதிவு செய்து, அம்மாம்பழத்தை ஆய்வகத்தில் இருந்தவர்களிடம் ஒப்படைத்துள்ளார் உபேந்திரா சிங். சோதனைகள் மேற்கொண்ட பின்னர்,  மோடி மாம்பழம் என்ற பெயரில் இந்த ரகத்தை பதிவு செய்து சான்றிதழும் வழங்கியிருக்கிறது வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்.

மலிஹாபாத்தில் அதிகம் கிடைக்கும் உலகப் புகழ் பெற்ற மாம்பழ வகையான தஸ்ஸேரியைப் போலவே, இந்த மோடி மாம்பழமும் மிகுந்த ருசி கொண்டதாக இருப்பதாகவும், மாம்பழ விளைச்சல் அதிகமாக இருக்கும் லக்னோவில் இரண்டு மாம்பழ வகைகளை இணைத்து புதிய மாம்பழங்களை உருவாக்கியதாகவும் கூறிய உபேந்திர சிங், இந்த புதிய ரக மாம்பழம் சராசரியாக 450 கிராம் எடை கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் இந்த மாம்பழம் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஆனால் அப்பொழுது இந்த மாம்பழம் விற்பனைக்கு வரவில்லை. இந்நிலையில் அடுத்த வருடம் இந்த மாம்பழம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ரகமான ’மோடி மாம்பழங்களின்’ ஆயிரம் மரக்கன்றுகள் விற்பனைக்கு தயராக இருப்பதாக கூறும் உபேந்திர சிங், ஒரு மரக்கன்றின் விலை ஆயிரத்திற்கு மேல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாம்பழங்களுக்கு மவுசு கூடும்போது இதன் விலை அதிகமாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இது போன்ற புதிய முயற்சிகளும், யுக்திகளும், விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கான மதிப்பை இன்னும் அதிகரிக்க வழிவகுப்பதுடன், விவசாயிகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை…

– தருண், நியூஸ்7 தமிழ் அக்ரி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.