நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும், கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. முதல் படமான பருத்திவீரனில் ஆரம்பித்து சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வரை தனது படங்களில் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று அவரது ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார். இதனையடுத்து தற்போது குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களின் இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில், ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. இந்த படத்தின் கதாநாயகியாக அனு இமானுவேல், இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அதே போல், டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தினை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதேபோல், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ’ஜப்பான்’ திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்தாண்டு தீபாவளி அன்று கார்த்தியின் சர்தார் படமும், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும் மோதிக் கொண்டன. இந்நிலையில், மீண்டும் இந்தாண்டு தீபாவளிக்கும் கார்த்தி, சிவகார்த்திகேயனின் படங்கள் மோதவுள்ளன ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.







