முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

4 மாதங்கள், 6000 மைல்கள் சைக்கிளில் பயணித்து காதலியை கரம் பிடித்த காவிய காதலன்!

46 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தனது காதலியை காண, சைக்கிளில் 4 மாதத்தில், 8 நாடுகளை, கிட்டத்தட்ட 6000 மைல்கள் பயணம் செய்து கரம் பிடித்துள்ள நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் காதலுக்காகவும், காதலிக்கவும் எவ்வளவு தூரம் பயணம் செய்வீர்கள் ? விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் கார்த்திக் ஜெஸ்ஸியை காண சென்னையிலிருந்து கேரளா வரையும் சென்றார், இது சாத்தியமான நிகழ்வு தான் ! ஆனால் மரியான் படத்தில் நடிகர் தனுஷ் அதையும் தாண்டி தனது காதலியை காண கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படியெல்லாம் கூடவா நிஜ வாழ்வில் நடக்கும்? என்ற ஆச்சரியம் நமக்கு தோன்றினாலும்… இங்கே ஒருவர் தனது காதலியை காண, சைக்கிளில் 8 நாடுகளை 4 மாதத்தில் கடந்து, கிட்டத்தட்ட 6000 மைல்கள் பயணம் செய்து கரம் பிடித்துள்ளார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை. அதுவும் இந்த சம்பவம் 1977-லில்
நடந்ததாம்.

இவர்களது இந்த காதல் குறித்து இன்றும் பலர் சமூகவலைத்தளங்களில் சிலாகித்து பேசுகிறார்கள். சரி, யார் இந்த காவியக் காதல் ஜோடி ? தன் காதலியை காண்பதற்க்காக சைக்கிள் பயணம் மேற்கொண்ட அந்த நபர் யார் முழு விவரத்தினை தற்போது காண்போம்.

பி.கே.மகாநந்தியா ஒரு பிரபலமான ஸ்வீடன் நாட்டு ஓவியர். இவர் பிறந்தது இந்தியாவாக இருந்தாலும், ஸ்வீடனில் வாழ்ந்து வரும் ஒரு ஓவிய கலைஞர் ஆவார். இவரது முழுப்பெயர் பிரதயும்னா குமார் மகாநந்தியா, இந்தியாவில் உள்ள குக்கிராமம் ஒன்றில் 1949 ஆம் ஆண்டு பிறந்த இவர், ஒரு தெரு ஓவியராக தனது வாழ்க்கையை துவங்கினார். இருப்பினும், இவரது அதீத திறமையின் காரணமாக பல வாய்ப்புகள் அவரை தேடி வர டெல்லியில் உள்ள கலை கல்லூரி ஒன்றில் பயிலும் சூழல் அவருக்கு அமைந்தது. இந்த நேரத்தில் தான் 1975 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அவரது வாழ்க்கையின் அந்த அழகான பயணம் துவங்கி உள்ளது. ஆம், சுவீடனை சேர்ந்த சார்லோட் வான் ஷெட்வின்
என்ற பெண்மணி அவர் பயின்று வந்த அந்த கல்லூரிக்கு வந்த போது, ஏழை மாணவரான பி.கே.மகாநந்தியா பார்ப்பவர்களின் உருவ படத்தை அப்படியே வரையும் திறன் படைத்தவர் என்பதை தெரிந்துக் கொண்டு, தன்னை ஓவியமாக வரைந்து தரும்படி கேட்டுள்ளார்.

அந்த நாட்களை நினைவுகூரும் பி.கே.மகாநந்தியா ” நான் வரைந்து கொண்டிருந்தபோது ஓவியம் வரையும் பலகையின் முன் அவள் தோன்றிய போது எனக்கு ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் மொத்த எடையும் இழந்து மிதப்பது போல் ஒரு உணர்வை அடைந்தேன். அவளது கண்களைப் பார்க்கையில் மிகவும் அழகாக ஆழ்ந்த நீல நிறத்தில் பெரிதாக வட்டமாக இருந்தது. அப்பொழுது எனக்குத் தோன்றிய உணர்வு அவள் என்னை சாதாரணமாக பார்ப்பதாக தோன்றவில்லை. என்னை உள்ளே ஆழ்ந்து பார்ப்பதாக ஒரு எக்ஸ்ரே மிஷினை போல என்னை ஊடுருவிப் பார்ப்பதாக எனக்கு தோன்றியது. அவள் என்னிடம் “என்னை நீங்கள் ஓவியமாக வரைய முடியுமா”என்று கேட்ட போது நான் அடைந்த பதட்டத்தில் என்னால் சரியாக ஓவியத்தை வரைய முடியவில்லை. எனவே நான் சார்லட் இடம் கூறினேன் வேறொரு நாள் வர முடியுமா என்று, அதன் பிறகு சார்லட் மூன்று முறை வந்தால் நான் மூன்று ஓவியங்கள் தீட்டினேன் ” என மனம் உருக தன் காதல் நினைவுகளை பலமுறை மகாநந்தியா தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்படியாக துவங்கிய இவர்களது நட்பு மெல்ல மெல்ல காதலாக மாறியது. இதையடுத்து மகாநந்தியா தனது பெற்றோரிடம் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக, அனுமதி கேட்க வருமாறு சார்லோட் வான் ஷெட்டை அழைத்துள்ளார். அப்போது சுவீடன் பெண்ணான சார்லோட் சேலை கட்டிக்கொண்டு வந்ததை, தன்னால் இப்போதும் மறக்கவே முடியாதென மகாநந்தியா கூறியுள்ளார்.

இந்நிலையில் சார்லோட் வான் ஷெட்வின் சொந்த நாடு திரும்ப வேண்டிய நேரம் நெருங்கியதால் அவர் மகாநந்தியாவை ஐரோப்பிய வர கூறினார். படிப்பின் பாதியில் இருந்த மகாநந்தியா அப்போது அவர் கொடுத்த விமான பயண சீட்டை கொண்டு ஐரோப்பிய செல்ல முடியவில்லை. பிறகு கடிதங்கள் மூலமாக காதல் பரிவர்த்தனை இருவர் மத்தியிலும் நடந்தது. இப்படியே கிட்டதட்ட ஒன்றரை வருடம் சென்று விட, படிப்பு முடிந்து பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்ட மகாநந்தியா-வினால் சார்லோட் வானை சந்திப்பதில் பிரச்சனை உண்டானது.

பிறகு தனது காதலியை காண தனது உடமைகளை விற்று பணம் சேகரித்து ஐம்பது ரூபாய்க்கு செகண்ட் ஹேண்ட் சைக்கிள் வாங்கினார் மகாநந்தியா. பின்னர் தன் நண்பர்கள் தெரிந்தவர்களின் உதவியுடன் வழி செலவுக்கான சிறிதளவு பணத்தை எடுத்துக் கொண்டு 1977-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி தனது 6000 மைல்கள் பயணத்தை தொடங்கினார். போகும் வழியில் அவரது சைக்கிள் நிறைய முறை சேதமடைந்துள்ளது. மேலும் அவர் உணவுக்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார். வழியில் சிலர் அவருக்கு உணவளித்ததோடு, ஒவ்வொரு நாளும் அவர் 70 கி.மீ சைக்கிளை ஒட்டியே கடந்துள்ளார். இதனால் நான்கு மாதங்கள், மூன்று வாரத்தில் ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி, பல்கேரியா, யூகோஸ்லாவியா, ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் டென்மார்க் போன்ற எட்டு நாடுகளை கடந்து சென்று தனது காதலி சார்லோட் வான் ஷெட்வினை சந்தித்தார் மகாநந்தியா. பின்னர் இருவரும் அங்கு அதிகாரபூர்வமாக திருமணம் செய்துக் கொடண்டதோடு, தற்போது அவர்கள் இருவரும் சுவீடனில் இரண்டு குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது இந்த சுவாரஸ்யமான காதல் கதை குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவுகள் பகிரப்பட்டு வரும் நிலையில், சமீபத்திலும் இவர்களது வாழ்க்கை பயணம் குறித்த தகவல்கள் ட்ரெண்ட் ஆகி உள்ளது. கலை உணர்வு கொண்ட நபர்களால் தான் காதலை, தன் காதலியை உணர்வு பூர்வமாக அணுக முடியும் என்பதற்கு ஏற்ப, ஒரு கலை இரு வெவ்வேறு சூழல்களில் வாழும் மனிதர்களை
எங்கிருந்தாலும் இணைக்கும் என்பதற்கு, இந்த இந்திய-சுவீடன் காதல் தம்பதியினரே பெரும் உதாரணமாக அமைந்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நுகர்பொருள் வாணிபக் கழகம் தனியார் மயமாகிறதா? ஜி.கே.வாசன் எதிர்ப்பு

Web Editor

தமிழகம் முழுவதும் 14-ம் தேதி முதல் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

Gayathri Venkatesan

அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளயீடு!

Gayathri Venkatesan