திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அத்தொகுதியின் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் சாரட் வண்டியில் அவரை அமர வைத்து ஓட்டி வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பூண்டி கலைவாணன். இவர், கருணாநிதி காலத்தில் இருந்தே அக்கட்சியில் இருந்து வருகிறார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அந்த வகையில், தி.மு.க. மூத்த தலைவர் பூண்டி கலைவாணன் அமைச்சர் உதயநிதியை சாரட் வண்டியில் அமர வைத்து அவரே அந்த வண்டியை ஓட்டி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019ம் ஆண்டு திமுகவில் இளைஞர் அணியின் தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக உதயநிதி ஸ்டாலின் தேர்வானார். பின்னர் இந்த ஆண்டு தமிழக அமைச்சரவை விரிவாக்கப்பட்ட போது இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகனான உதயநிதிக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.







