கேரள மாநிலம் கோழிகோட்டில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தீவிரவாத சதி செயலா என புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் ஓடி கொண்டிருந்த ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் என்.ஐ.ஏ. உட்பட புலனாய்வு துறை அதிகாரிகள் குற்றவாளி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலானது கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் ரயில் நிலையம் அருகே இரவு 9.37 மணிக்கு வந்து கொண்டிருக்கும் போது D1 கோச்சில் திடீரென நடந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
இதனால் அலறியடித்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய நேரத்தில் ரயிலில் இருந்து அந்த நபர் வெளியே குதித்து தப்பி ஓடிஉள்ளார். பயணிகள் இதுகுறித்து ரயில்வே போலீசார் மற்றும் எலத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார், தீக்காயம் அடைந்த பயணிகளை மீட்டு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டதில் ரயில் தண்டவாளம் அருகே ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் மற்றும் ஆண் சடலம் தீ காயங்களுடன் கண்டெடுக்கபட்டது. மேலும் ஆய்வு செய்ததில் ரயில்வே தண்டவாளத்தில் பேக் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் ஒரு மொபைல் போன், பெட்ரோல் நிறைந்த ஒரு பாட்டில் மற்றும் ஒரு டைரி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
போலீஸ் விசாரணையில், அந்த டைரியில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் உட்பட சில ஊர்களின் பெயர்கள், கோடுகள், சில காவல் நிலைய பெயர்கள் எழுதப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் தீவிரவாதிகள் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீவிரவாத தடுப்புபிரிவு அதிகாரிகள், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் கேரளா மாநில காவல்துறை டிஜிபி அனில் காந்த் உட்பட அதிகாரிகள் விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ரயில் தண்டவாளத்தில் இருந்து 3 சடலங்கள் மீட்ட நிலையில் அவர்கள் தீயில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து வெளியேற முயன்ற போது கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த மூவரில் தாய் ரக்மத் மற்றும் மகன் நவ்பில் மேலும் இன்னொரு ஆண் ஷாராமத் இவர்கள் மூவரும் கண்ணூர் மட்டன்னூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
பின்னர் ஏடிஜிபி அஜித் குமார் தலைமையில் ரயில்வே போலீசார், உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட விசாரணை குழுக்கள் ஒன்றிணைந்து விசாரணையை துரிதபடுத்தினர். அந்த நேரத்தில் பயணம் செய்த பயணி ரசிக் என்பவர் மூலம் அடையாளம் காணப்பட்ட அந்த மர்ம நபர் உருவத்தை வரைந்து போலீசார் வெளியிட்டனர். அந்த நபர் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க 112 என்ற எண்ணையும் போலீசார் அறிமுகப்படுத்தினர்.
இந்த நிலையில் கோழிகோட்டில் கட்டிட வேலைக்கு வந்த ஒரு நபராக இருக்கலாம் என புலனாய்வு துறை அதிகாரிகளின் சந்தேகத்தின் பெயரில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா அருகே உள்ள புலந்ச்சாகர் பகுதியில் இதே உருவம் கொண்ட ஒருவரை கேரள மாநில புலனாய்வுத்துறை காவல்துறையினர் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகளும் விசாரணையில் இறங்கி உள்ள நிலையில் குற்றவாளிகள் குறித்து சரியாக துப்பு துலங்காததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








