”என்எல்சி நிறுவனத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது” – திருமாவளவன்

என்எல்சி நிறுவனத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோகக்கூடிய சூழல் உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை நூறடி சாலையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நெய்வேலி என்.எல்.சி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலங்கள்…

என்எல்சி நிறுவனத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோகக்கூடிய சூழல் உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை நூறடி சாலையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நெய்வேலி என்.எல்.சி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலங்கள் கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்
வேல்முருகனை சந்தித்தனர். அவர்களுடைய கோரிக்கைகளை கேட்ட பின்னர் வேல்முருகன் மற்றும் திருமாவளவன் கூட்டாக செய்தியாளர் சந்தித்தனர்.


அப்போது பேசிய தவாக தலைவர் வேல்முருகன், “கடலூர் மாவட்டத்தில் இருக்கின்ற என்எல்சி நிறுவனம், நிலம் மற்றும் வீடுகளை காலி செய்து பழுப்பு நிலக்கரிக்கான சுரங்கத்தை அமைக்க முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த காலங்களிலும் பல்லாயிரக்கணக்கான நிலங்களை கையகப்படுத்தி உள்ளனர். 2000ஆம் ஆண்டு முதல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும். தற்போது நிலங்களை கையகப்படுத்த போகும் விவசாயிகள் என்.எல்.சி வழங்கக்கூடிய பணம் மற்றும் வேலைவாய்ப்பு வேண்டாம் என்று கூறுகிறார்கள். முதலமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்து பேச இருக்கிறோம்.

பரந்தூர் விமான நிலையத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டும் ஒரே நிலைப்பாட்டை தான் கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்கிற பெயரால் அந்த பகுதி மக்கள் தூக்கி எறியப்படுகிறார்கள். இதேதான் என்எல்சி நிறுவனத்தின் நிலைப்பாடாக உள்ளது. நெய்வேலியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையை வைத்து பொதுமக்களை மிரட்டி, நிலத்தை கையகப்படுத்துகிறார்கள். சந்தை மதிப்பை விட குறைவாக கொடுத்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர். என்எல்சி நிர்வாகம் அறிவித்த தொகையும், வேலைவாய்ப்பு காண்ட்ராக்டும் திருப்தி அளிக்காத காரணத்தால் ஒட்டுமொத்த விவசாயிகளும் இதை புறக்கணித்துவிட்டோம். மக்களுடைய உணர்வுகளுக்கு மாநில அரசு பதிலளிக்க வேண்டும்” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் இரண்டு சுரங்கங்கள் விரிவாக்கம் செய்வதற்கு விவசாயிகளின் நிலத்தை கையெடுக்கப்படுத்த திட்டமிட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நிலங்களை பறி கொடுக்க உள்ளனர். கடந்த காலங்களில் நிலத்தை வழங்கிய மக்களை என்எல்சி நிறுவனம் ஏமாற்றி இருக்கிறது.

முன்னர் நிலத்தை வழங்கிய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையுமே என்எல்சி
நிறுவனம் நிறைவேற்றவில்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. என்எல்சி நிறுவனம் இந்த விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும் சூழலில், இருப்பிடம் மற்றும் மறுவாழ்வுக்கான விதிகளை முழுவதும் பின்பற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இது குறித்து ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை மாநில அரசு அமைத்திட வேண்டும். இந்த குழு முழுமையான ஆய்வை நடத்தி ஒரு ஏக்கருக்கு எவ்வளவு இழப்பீடு தர வேண்டும் என்பதை மக்கள் கோரிக்கை விடுக்கிறார்களோ, அந்த கோரிக்கைகளை பரிசீலித்து 2000ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நிலம் வழங்கியுள்ள, வழங்கப் போகிற மக்களுக்கு பாகுபாடு இல்லாமல் இழப்பீடு வழங்குவதற்குரிய தகவல்களை இந்த குழு திரட்டி தர வேண்டும்.

என்.எல்.சி நிறுவனத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோகக்கூடிய சூழல் உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிரந்தரமாக வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள், தோழமைக் கட்சிகள் ஒருங்கிணைந்து விரைவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த இருக்கிறோம். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழக முதல்வர் இதில் தலையிட வேண்டும். மாவட்ட ஆட்சியர் தான் நிலத்தை கையகப்படுத்துகிற பணியில் ஈடுபடுகிறார். என்எல்சி நிறுவனம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கக்கூடிய நிறுவனம். முடிந்தால் நேரிலே சந்தித்து தமிழக வாழ்வுரிமை கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் ஒருங்கிணைந்து முதலமைச்சரின் கவனத்திற்கு இதைக் கொண்டு சேர்ப்போம்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.