தூக்கத்திலேயே பிரிந்த மூதாட்டியின் உயிர்… வளர்ப்பு நாய் செய்த அதிர்ச்சி செயல்!

காரைக்குடி அருகே உயிரிழந்த உரிமையாளரின் முகத்தை வளர்ப்பு நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி மயிலாடும் பாறை
பகுதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (70). இவருக்கு முனீஸ்வரி, பாண்டி
செல்வி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மூதாட்டி சுலோச்சனா தனது பேரனுடன் வசித்து வந்தார். இவருக்கு திடீரென சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து, நேற்று அவரது பேரன் லோகேஸ் மூதாட்டி சுலோச்சனாவை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.

நேற்று இரவு மூதாட்டி சுலோச்சனா வீட்டு முன்புறத்திலும் பேரன் லோகேஷ் வீட்டு உள்புறத்திலும் படுத்து தூங்கினர். முன்னதாக, மூதாட்டி சுலோச்சனா ஒரு நாயும், ஒரு பூனையும் வளர்த்து வந்தார். இவர் வளர்த்த நாய் சுலோச்சனாவை அடிக்கடி செல்லமாக கடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூதாட்டி சுலோச்சனா நேற்று இரவு தூக்கத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. அப்போது வளர்ப்பு நாய் மூதாட்டி சுலோச்சனாவின் முகம் மற்றும் கை கால்களில் கடித்து குதறியது.

இதை பார்த்த வளர்ப்பு பூனையும் சுலோச்சனாவை கடித்ததாக சொல்லப்படுகிறது. உடனடியாக வளர்ப்பு நாய் பூனையை கடித்து கொன்றது. இதுகுறித்து அறிந்த பேரன் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.