ஆசிரியர்கள் பணியிட மாறுதல் விவகாரம்! – பள்ளிக்கல்வித்துறை கிடுக்கிப்பிடி!

கிருஷ்ணகிரி,  திருவண்ணாமலை,  கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்ககத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு…

கிருஷ்ணகிரி,  திருவண்ணாமலை,  கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி இயக்ககத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்துப்பாட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப அனுமதி வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்ககம் பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை  விடுத்திருந்தது.

இந்நிலையில்,  கடிதம் வாயிலாக பள்ளிக்கல்வித்துறை சில அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு வழங்கியுள்ளது.  அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

  • 757 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தற்போது வழிவகையில்லை.
  • ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடைய பள்ளிகளுக்கு பணிநிரவல் (deployment) செய்யப்பட வேண்டும்.
  • தற்போது பட்டதாரி ஆசிரியர் 2000 பணியிடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டதில் தேர்வாகும் தேர்வர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாகவுள்ள கிருஷ்ணகிரி,  திருவண்ணாமலை,  கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும்.
  • இந்த மாவட்டங்களில் தேர்வர்களை முதலில் நியமனம் செய்யும் போதே குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இம்மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் எனும் நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட வேண்டும்.
  • அதோடு,  மேற்காணும் அறிவுறுத்தல்களை தவறாது கடைபிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை கடிதம் வாயிலாக அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.